இலங்கை, போராட்டம்

மகிந்தா ராஜபக்சே குடும்பத்துடன் திரிகோணமலைக்கு ஹெலிகாப்டரில் தப்பியோட்டம்?- கடற்படைதளத்தை சூழ்ந்து மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் அங்கம் வகிப்பவர்கள் பதவி விலக வேண்டும், மக்கள் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர் போராட்டக்காரர்கள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கையில் போராட்டம் நடத்த வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தி அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து மிகிந்தா ராஜபக்சே பதவி விலகினார்.இருப்பினும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி கொழும்பு நகரில் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் இலங்கையே பற்றி எரிகிறது. ஆவேசமடைந்த மக்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பாரம்பரிய வீட்டை நேற்று இரவு எரித்தனர். ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.

மகிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று பலத்த பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து புறப்பட்டு திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கொழும்பில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்படைத் தளத்தை அவர்கள் சென்றடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் பரவிய நிலையில் அங்கும் ஏராளமானோர் கூடினர். கடற்படைத் தளத்திற்கு வெளியேயும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனையடுத்து அங்கும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *