சட்டம்

மாநில அரசின் உரிமை இடஒதுக்கீடு

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில், மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் விதமான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகளும் வரவேற்புக்குரியவை. பின்தங்கியவர்களிலும் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பயனைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதும், அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பு வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதும் இந்தத் தீர்ப்புகளின் வழியாக உறுதிப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு இடஒதுக்கீடு நடைமுறைகளும் தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு மற்றும் அது தொடர்பான வழக்குகளில், பட்டியல் சாதியினரில் உட்பிரிவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனினும், இவ்விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவை என்றும் அது கூறியுள்ளது. எனவே, உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இறுதியானதில்லை என்றபோதும் தற்போதைய நடைமுறையின் சட்டரீதியான செல்லும் தன்மையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்ற வகையில் முக்கியமானது. 2004-ல் ‘இ.வி.சின்னையா எதிர் ஆந்திர பிரதேச அரசு’ என்ற வழக்கில், மாநில அரசுக்கு உள் இடஒதுக்கீடு செய்ய அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் பார்வை தற்போது மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் முறை 2009-ல் அன்றைய திமுக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அடுத்ததாக, மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த மற்றொரு வழக்கில், இவ்விஷயத்தில் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு இந்திய மருத்துவ ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு 1989-ல் அன்றைய திமுக அரசால் கொண்டுவரப்பட்டது. தமிழக அரசின் இந்த இடஒதுக்கீட்டை 2017-ல் இந்திய மருத்துவ ஆணையம் ரத்துசெய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால் அடுத்த கல்வியாண்டு முதல் மீண்டும் இந்த இடஒதுக்கீட்டு முறை தொடரவுள்ளது. அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடமும் உள் இடஒதுக்கீடு தொடர்பிலான கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மஹாராஷ்டிரத்தில் மராத்தாக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்று தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 23 அன்று விசாரணைக்கு வந்தன. 1992-ல் இந்திரா சஹானி வழக்கில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக் கூடாது என்று 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. 28 மாநிலங்கள் 50%-க்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், இந்திரா சஹானி தீர்ப்பை மறுபரிசீலிக்கும் வகையில் 11 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 85% பிற்படுத்தப்பட்டோரைக் கொண்ட மஹாராஷ்டிரத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-க்குள் சுருக்குவது அநீதி என்பது அவர்களின் வாதம்.

இடஒதுக்கீடு விஷயத்தில் இந்தியா முழுவதற்கும் பொதுவான விதி ஒன்றை வகுப்பது அதன் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துவிடும். மாநிலங்கள் தங்களது மக்கள்தொகையில் பிற்பட்ட வகுப்பினரின் விகிதாச்சாரத்துக்கு ஏற்பவும், கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்கள் பெற்ற பயன்களின் அடிப்படையிலும் இடஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதே நியாயமானதாக இருக்க முடியும். இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதையே நிரூபிக்கிறது.

SOURCE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *