கட்டுரை, தமிழ்நாடு, பொருளாதாரம்

மீள்வது எப்போது? தமிழக பட்ஜெட்

tamil-nadu-cm-budget

தமிழக அரசின் 2015-16-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் எதிர்பார்த்தபடியே புதிய வரிகள் ஏதும் இல்லை. இப்போதைய வரி விகிதங்களும் மாற்றப்படவில்லை. மொத்தம் ரூ. 650 கோடி மதிப்புக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் மொத்த வருவாய் ரூ. 1,42,681.33 கோடியாகவும், செலவு ரூ. 1,47,297.35 கோடியாகவும் பற்றாக்குறை ரூ. 4,616.02 கோடியாகவும் இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. தமிழக அரசின் பொதுக் கடன் ரூ. 2,11,483 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வாங்கிய கடன்களுக்கான வட்டிச் செலவு ரூ. 17,856.65 கோடி. இது மொத்த வருவாய் வரவுடன் ஒப்பிடும்போது 12.52%. 2015-16 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மட்டும் ரூ. 31,829.19 கோடியாக இருக்கும்.

சமூக நலத் திட்டங்களுக்கு வழக்கம்போல கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆதி திராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ. 11,274.16 கோடி, பழங்குடியினர் துணைத் திட்டத்துக்கு ரூ. 657.75 கோடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்குப் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களுக்கு ரூ. 250.49 கோடி, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ. 364.62 கோடி, தொழிலாளர் நலத் துறைக்கு ரூ. 139.26 கோடி, இலங்கைத் தமிழர் நலனுக்கு ரூ. 108.46 கோடி, விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கும் சிறப்புத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ. 2,000 கோடி, விலையில்லா மடிக்கணினித் திட்டத்துக்கு ரூ. 1,100 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. உணவு மானியத்துக்கு ரூ. 5,300 கோடி, நெடுஞ்சாலைத் துறைக்கு மொத்தமாக ரூ. 8,228.24 கோடி, மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 8,245.41 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ. 5,248 கோடி, உயர் கல்வித் துறைக்கு ரூ. 3,696.82 கோடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 1,575.36 கோடி, எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்துக்கு ரூ. 1,470.53 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்றால், மின் துறைக்கு மொத்தம் ரூ. 13,586 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரூ. 6,000 கோடியில் அதிகத் திறன் கொண்ட மின் கடவுப்பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பயிர்க்கடன் வழங்க ரூ. 5,500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. உலக வங்கியின் உதவியுடன் ரூ.745.49 கோடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் 113 அணைகளைப் புனரமைக்கும் திட்டத்துக்கு ரூ. 450.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்ப் பாசனத் துறைக்கு ரூ. 3,727.37 கோடி, நதிநீர் இணைப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள ரூ. 253.50 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

செய்யப்பட வேண்டியவற்றைச் செய்தாக வேண்டியது எவருக்கும் கடமை. அதைத் தாண்டி ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் யாவற்றுக்கும் உரிய நியாயம் செய்ய முயன்றிருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால், அதிமுக அரசின் மைய இலக்கான ‘விஷன் 2023’-க்கு என்ன நியாயம் செய்திருக்கிறார்? பொருளாதார மந்தநிலை நீறுபூத்த நெருப்பாகச் சூழ்ந்துகொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தைத் தூக்கி நிறுத்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக என்ன இருக்கிறது என்று தேடினால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் நிதிநிலையும் கடன்களும் எவ்வளவு பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார் ஜெயலலிதா. தமிழகம் அந்தப் பாதையிலிருந்து இன்னமும் மீள முடியாமல் சிக்கிக்கொண்டிருப்பதையே இந்தத் ‘தேர்தல் காய்ச்சல்’ நிதிநிலை அறிக்கையும் சொல்கிறது.

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *