சிந்தனைக் களம், தமிழ்நாடு, போராட்டம், விமர்சனம்

முகிலன் எங்கே? தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சூழலியல், மனித உரிமைப் போராளி முகிலன் காணாமல்போயிருக்கும் சம்பவம், சமூகப் போராளிகள் விஷயத்தில் அரசு இயந்திரம் நடந்துகொள்ளும் முறை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பிப்ரவரி 15-ல் தூத்துக்குடி படுகொலை தொடர்பான காணொளியை வெளியிட்ட அவரை, அன்று இரவு முதல் காணவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறையினரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்தக் காணொளியில் இருக்கும் நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்படுகிறது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி 2018 மே 22-ல் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. காவல் துறையினர் சிலர் மீது வழக்குப் பதிவும் செய்திருக்கிறது சிபிஐ. இந்தச் சூழலில்தான், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டை ஒட்டி கலவரச் சூழல் உண்டாக்கப்பட்டதில் காவல் துறையினருக்கும் பங்கிருக்கிறது என்று குற்றஞ்சாட்டும், அது தொடர்பில் பல ஆதாரங்களை முன்வைக்கும்  காணொளியைச் சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார் முகிலன். அதற்குப் பிறகு, மதுரைக்குச் செல்ல எழும்பூர் ரயில் நிலையம் சென்ற நிலையில் காணாமல் போயிருக்கிறார்.

இதையடுத்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர். எனினும், அவரைத் தேடும் முயற்சியில் காவல் துறையினர் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் ஆகியோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்க காவல் துறையினருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அந்த வழக்கு

சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அவர் காணாமல்போய் 10 நாட்களுக்குப் பிறகும் அவர் எங்கு இருக்கிறார் எனும் கேள்விக்கு மட்டும் விடை கிடைத்தபாடில்லை. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், சமூகப் பிரக்ஞை அதிகரித்திருக்கும் சூழலில், சமூகச் செயல்பாட்டார்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானியர்களின் நிலை என்ன என்று எழும் கேள்விகள் காத்திரமானவை.

சமூக ஊடகங்களில் ‘முகிலன் எங்கே?’ என்று எழுந்த கேள்வி இன்றைக்குத் தமிழகத்தின் பிரதானக் கட்சிகள், அமைப்புகள் வரை எதிரொலிக்கிறது. முகிலனைக் கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரியிருக்கிறார்கள். ஆனால்,  இவ்விவகாரத்தைத் தமிழக அரசு கையாளும் விதம் ஏமாற்றம் தருகிறது. முகிலன் குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கும் முதல்வர் பழனிசாமி, “அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் “தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டக் கூடாது” என்றும் பேசியிருப்பது பொறுப்பான பதில் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு பொறுப்பு என்பதை இங்கே அழுத்தந்திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. முகிலன் உயிர் முக்கியமானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *