இந்தியா – சீனா இடையே சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 2 நாட்களே ஆன நிலையில், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை மிக மோசமாக உள்ளது என சீன அரசின் பத்திரிக்கை விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த வாரம் பிரதமர் மோடி மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது இருநாடுகளுக்கிடையே சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையழுத்தாகின. சீனாவில் இருந்து மங்கோலியா சென்ற மோடி அங்கு இருந்து தென்கொரியா சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து சீனாவின் அரசு பத்திரிக்கையான குலோபல் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. உலகம் சுற்றும் மோடிக்கு பொருளாதாரம் என்பது குழப்பமே என்ற தலைப்பில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் பிரதமர் மோடி தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் ஓயாத சுற்றுப்பயணமே ஓராண்டில் அவரது அரசு செய்த முக்கிய சாதனை என சீனா விமர்சித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் இந்தியா வருவதற்கு மிகக்குறைவான வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக கூறியுள்ள சீனா, புவியியல் ரீதியாக அமைந்துள்ள இடம் காரணமாகவே இந்தியாவுக்கு சாதகமான வெளிநாட்டு உறவுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மோடி அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் இந்தியாவின் தற்போதைய நிலை அவர்களது வாக்குறுதிக்கு தொடர்பில்லாமல் இருப்பதாக தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, மோசமான சாலைகள் மற்றம் துறைமுகங்களுக்கான போக்குவரத்து வசதி குறைவு, தொழிலாளர் பிரச்சனை போன்றவற்றின் மத்தியில் முதலீடுகளை ஈர்ப்பது இந்தியாவுக்கு மிக பிரச்சனை என்றும் அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சில திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் மாநில அரசுகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதாக சீனா கூறியுள்ளது. மோடி சீன பயணத்தை முடித்து 2 நாட்களேயான நிலையில் அந்நாட்டு அரசு பத்திரிக்கையே மோடியையயும், இந்தியாவையும் கடுமையாக விமர்சித்து இருப்பது மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
– தினகரன்