உலகம், சட்டம்

முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – பைடன் அதிரடி!

துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாகத் தெரிவித்து உள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில், 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்த ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த துயர சம்பவத்தை ஒட்டி, அமெரிக்க தேசியக் கொடிகள் அனைத்தும் இன்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படுகொலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த 2 வாரத்திற்குள் அமெரிக்காவில் நடந்த 2வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். டோக்கியோவில் நடைபெற்ற குவாட் மாநாட்டை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இச்சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் உலகின் மற்ற பகுதிகளில் அரிதாகவே நடக்கின்றன. ஆனால் நாம் இதனை ஏன் மிக சாதாரணமாகக் கடந்து செல்கிறோம்? கடவுளின் பெயரால் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. குழந்தையை இழப்பது என்பது ஆன்மாவின் ஒரு பகுதியை பிரித்தெடுப்பது போன்றதாகும். பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இனி பார்க்க முடியாது. அந்த பெற்றோர்களுக்கு கடவுள் மன வலிமையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *