அரசியல், இந்தியா, சிந்தனைக் களம், விமர்சனம்

மோடி 365° – காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

kapil_sibal_

கடந்த ஓராண்டில் இந்தியாவை மாற்றிவிட்டதாக நரேந்திர மோடி நம்புகிறார். வெளிநாடுகளில் குறிப்பாக அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் பேசும்போது இதை அவர் வலியுறுத்துகிறார். ஆனால், இந்தியாவில் பேசுவதில்லை. வறுமையில் வாடும் மக்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருவேன் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார். ஓராண்டு முடிவில் அவர் வாக்குறுதி தந்தபடி மாறுதல்களைக் கொண்டுவந்துவிட்டாரா என்று பார்க்க வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் 10% அல்லது அதற்கும் மேல் வளரும் என்று வாக்குறுதி தந்தார். தொழில் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவேன் என்றார். ஓராண்டுக்குப் பிறகும் அதே நிலைமைதான். 2014 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2,941 பெரிய நிறுவனங்களின் லாப விகிதம் 16.9%. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தொழில் நிறுவனங்களின் லாபத்துக்குக் காரணியாக இருக்கும் முதலீடு, மக்களின் நுகர்வு, பெரிய நிறுவனங்களின் லாப-ஈவு போன்றவை தொடர்ந்து வலுவில்லாமலே இருக்கிறது. 2016 மார்ச் வரையில் இப்படித்தான் இருக்கும் என்று பலரும் கணித்துள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு பீற்றிக் கொள்ளும் சாதனைகள் அனைத்துமே அற்பமானவை. நிதி அமைச்சகம் (2015 மார்ச்) வெளியிட்ட தரவு களின்படி ரூ.18.13 லட்சம் கோடி மதிப்புள்ள 2,099 மிகப்பெரிய திட்டங்கள், பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள திட்ட மேலாண்மைக் குழுவிடம் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. அரசின் வரவு-செலவுக்கு இடையிலான பற்றாக்குறையைவிட இந்த அளவு அதிகமாக – ரூ.7,12,000 கோடியாக (13.2%) – இருக்கிறது. 2013 செப்டம்பரில் ரூபாயின் மாற்று மதிப்பு டாலருக்கு நிகராக 66 என்றிருந்தபோது, மன்மோகன் சிங் அரசின் நிர்வாகத்தால்தான் ரூபாய் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது என்றார். இப்போதும் ஒரு டாலருக்கு 64 ரூபாய்தான் மாற்று மதிப்பாக நீடித்து, அதே அவசர சிகிச்சைப் பிரிவில் ரூபாய் படுத்துக்கிடக்கிறது.

தேர்தலுக்கு முன்னால் விலைவாசி உயர்வு உண்மையிலேயே பெரிய பிரச்சினையாக இருந்தபோது, தான் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன், குடும்பங்கள் தத்தளிக்க வேண்டாம் என்று வாக்குறுதி தந்தார். அவருடைய அரசின் அதிர்ஷ்டம் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை வீழ்ச்சி அடைந்தது. 2014 மே மாதம் ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் 108 டாலர்களாக இருந்தது 60 டாலர்களாகக் குறைந்தது. இதனால், நிதியமைச்சரால் பற்றாக்குறையை இட்டு நிரப்ப முடிந்தது.

மொத்த விலைக் குறியீட்டெண்ணும் சரிந்தது. ஆனால், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியா வசியப் பண்டங்களின் விலை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சாமானியர்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோதுமை மாவு, பருப்பு, பால், கடுகு எண்ணெய், வனஸ்பதி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

தெரிந்தே பேசினார்

வெளிநாடுகளில் பதுக்கிய கோடிக் கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை மீட்போம்; கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாயைப் போடுவோம் என்றெல்லாம் சொன்னார்களே… என்னவாயிற்று? ஊழலை ஒழிப்பேன் என்றும் மோடி வாக்குறுதி அளித்தார். 21.4.2014-ல் பேசியபோது, கிரிமினல் பேர்வழிகளை நாடாளுமன்றத்திலிருந்து நீக்குவேன் என்றார். இதுவரை அப்படி எதையுமே அவர் செய்யவில்லை.

சமூக நலத் துறையில் பின்னடைவு

சமூக நலனைப் புறக்கணித்திருப்பதுதான் இந்த அரசின் மிகப் பெரிய, உண்மையான தோல்வி. விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளும் சிறு வணிகர்களின் கவலைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண் துறை கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. வேளாண் துறை வளர்ச்சி 2014-ல் 3.7% ஆக இருந்தது 1.1% ஆகக் குறைந்துவிட்டது. இதற்கு முன் இருந்ததைவிட அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். 80.85% விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான அளவு நிலங்களைத்தான் வைத்திருக்கிறார்கள் என்று மோடி அறிய வேண்டும். அதாவது, நிலம்தான் அவர்களுக்கு ஒரே வாழ்வாதாரம். அதை அவர்கள் இழந்தால் அவர்களுடைய வாழ்வுரிமையே பறிபோய்விடும்.

விவசாயத்தைத் தொடர்ந்து பீடித்துள்ள பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பதும் இந்த அரசுக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே சலுகையைத் தருகிறார் மோடி. இது மிக மோசமான சலுகைசார் முதலாளித்துவக் கோட்பாடாகும்.

அரசியலிலும் நிறுவனங்களிலும் – குறிப்பாக கல்வித் துறையில் – காவியைப் புகுத்தும் தீய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது நம்முடைய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. லவ் ஜிகாத், கர் வாப்ஸி என்ற கருத்துகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. இந்தியாவின் ஜீவன் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றப்பட வேண்டும். இதுவரை நம்முடைய சமூகம் எந்த நன்மைக்காக எல்லாம் துணையாக நின்றதோ அவற்றையெல்லாம் நல்ல வழிமுறைகளிலும் மோசமான வழிமுறைகளிலும் அழிக்கவே இந்த அரசு முயல்கிறது!

கபில் சிபல், காங்கிரஸின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *