இந்தியா, சட்டம்

வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு

வாரணாசி: வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை சீல் வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என 5 பெண்கள், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் நேற்று மூன்றாம் நாள் வீடியோ ஆய்வு பணி நடைபெற்றது. நேற்று முன்தினம் வரை சுமார் 65 சதவீத ஆய்வு நிறைவடைந்த நிலையில் நேற்று கடைசி கட்ட வீடியோ பதிவு தொடங்கியது. ஆய்வுப்பணி முடிந்த பின் பேசிய ஆய்வு பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் ஆணையர் கூறுகையில், ‘‘நாளை (இன்று) எங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்’’ என்று தெரிவித்தார். ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இது ஒரு முக்கிய ஆதாரம் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதன்மோகன் யாதவ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று வாரணாசி நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த பகுதிக்குள் யாரும் நுழைய தடை விதித்த நீதிமன்றம் மசூதி உள்ள பகுதியில் பாதுகாப்பு வழங்கும்படி வாராணசி காவல் ஆணையர் மற்றும் ஒன்றிய எல்லை பாதுகாப்பு படை (சிஆர்பிஎப்) கமாண்டருக்கு உத்தரவிட்டார்.

* உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கள ஆய்வு நடத்த குழு அமைத்ததை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாராணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கள ஆய்வை மே 17ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு பரிசீலித்தது. பின்னர் தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்காததால் கள ஆய்வுக்கு தற்போது தடை விதிக்க முடியாது. எனினும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஜே.கே.மகேஸ்வரி, ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *