வேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது.
கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்களாகப் பதவி வகித்தவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இந்தியர்களுக்கு அதீத பெருமித உணர்வு தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆம், ஐசக் நியூட்டன், ஹம்ப்ரி டேவி, எர்னெஸ்ட் ரூதர்போர்டு போன்ற தலைசிறந்த அறிவியல் அறிஞர்கள் அலங்கரித்த பதவியை டிசம்பர் 1-லிருந்து அலங்கரிக்கவிருக்கிறார் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
இந்த இனிப்பான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது, இந்தியாவில் பிறந்த விஞ்ஞானி என்ற முறையில் தான் உணர்ந்த சங்கடத்தையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘பாரம்பரியம் மிக்க நமது பாரதத்தில் பல ஆயிரமாண்டுகள் காலத்துக்கு முன்பே ஆகாய விமானங்கள் புழக்கத்தில் இருந்தன’ என்பன போன்ற ஆதாரமற்ற புனைகதைகள், கடந்த ஜனவரி மாதம் மும்பையில் நடந்த ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ மாநாட்டில் முன்வைக்கப்பட்டதைத்தான் அவர் விமர்சித்திருக்கிறார். “அறிவியலில் அரசியல்ரீதியான, தனிப்பட்டரீதியான அல்லது மதரீதியான கொள்கைகளுக்கு இடமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கும் வெங்கட்ராமன், “மதக் கொள்கைகள் கொண்ட சிலரால், அர்த்தமற்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டபோது, இந்திய அறிவியல் உலகம் உடனடியாகவும், உறுதியாகவும் அதை மறுக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியளித்தது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
உலக அரங்கில் அறிவியல் துறையின் மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் வெங்கட்ராமன், இந்தியாவில் அரசியல் மற்றும் மதரீதியான கொள்கைகள் அறிவியல் வளர்ச்சியைத் தடுத்துவிடும் என்று அக்கறையுடன் சுட்டிக்காட்டியிருப்பதை அரசு அலட்சியம் செய்யக் கூடாது. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பதைப் போல், அறிவியல் என்பது உண்மைகள் மற்றும் சோதனைகளின் அடிப்படையில் செய்யப்படும் விசாரணை.
மதத்தின் அடிப்படையிலான அரசியல் கொள்கையைக் கொண்டிருக்கும் கட்சியான பாஜகவின் தலைமையில் மத்தியில் அமைந்திருக்கும் அரசு, அறிவியலுக்குப் பொருந்தாத விஷயங்களை ஆதரிப்பதுடன் அங்கீகரிக்கவும் முயன்றுவரும் நிலையில், சர்வதேச அரங்கிலிருந்து ஒரு இந்தியக் குரல் ஆதங்கத்துடன் ஒலித்திருக்கிறது.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தலைமையேற்கப்போகும் ராயல் சொஸைட்டியில் அங்கம் வகிக்கும் 1,400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளில் 3.3% பேர்தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்று 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இந்த அமைப்பின் தலைவராகத் தற்சமயம் இருக்கும் பால் நர்ஸும், நமது வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனைப் போலவே அறிவியலில் அரசியல் கலப்பதை முற்றிலும் எதிர்த்தவர். “அறிவியல்ரீதியான விவாதங்கள் அரசியல் விவாதங்களைப் போல் நடத்தப்படுவது தவறு” என்று கண்டனக் குரல் எழுப்பியவர் அவர்.
அவரது இடத்தை நிரப்பவிருக்கும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், உரிய சமயத்தில், உரிய அறிவுரையை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறார். அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மத்திய அரசு நடந்துகொள்ளும் என்று நம்புவோம்!