தமிழ்நாடு

வெயில் காலம் பற்றி பயமா.. கரண்ட் கட் ஆகாது.. சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி!

சென்னை: கோடைக்காலத்திலும் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டசபையில் உறுதியளித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.  மேலும், எங்கெல்லாம் துணை மின் நிலையங்கள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

சட்டசபை கூட்டம்

தமிழக சட்டசபையில் இன்று காலை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சாக்கோட்டை அன்பழகன், அரக்கோணம் ரவி ஆகியோர் மின்சாரத்துறை தொடர்புடைய கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோடைக்காலத்திலும் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

துணை மின் நிலையங்கள்

துணை மின் நிலையங்களை பொறுத்தவரை அது தேவைப்படும் இடங்களில் விரைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்தாண்டே அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் கடந்த ஓராண்டில் மட்டும் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 16-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் விவசாயிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசவிருக்கும் தகவலையும் அவர் சட்டசபையில் வெளியிட்டார்.

தஞ்சை மாவட்டம்

விவசாயிகள் நிறைந்த தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி முதல்வர் உத்தரவின் பேரில் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோடைக்காலத்தில் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்த அதே வேளையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மிரட்டும் மின்வெட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் நிம்மதி பொதுவாக கோடைக்காலம் வந்தாலே மின் விசிறி, ஏசி, உள்ளிட்ட உபகரணங்களின் பயன்பாடுகள் அதிகம் இருக்கும் என்பதால் மின்சாரம் அதிகளவில் செலவாகும். இதனிடையே தட்டுபாடின்றி சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பால் மக்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *