வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பண விவரத்தை தாமாக முன்வந்து தாக்கல் செய்வோருக்கு அந்நியச் செலாவணி முறைகேடு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புப் பண தடுப்பு சட்டத்தில் இதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் அதுபற்றிய விவரத்தை அளிப்பதற்கு 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் தகவல்களை தாமாக முன்வந்து அளிப்பவர்கள் அதற்குரிய வரியைச் செலுத்திவிட்டு சட்ட நடவடிக்கையிலிருந்து விடுபடலாம்.
அதே சமயம் ஊழல் மூலம் சொத்து சேர்த்த கருப்புப் பணமாக இருந்தால் அதற்கு விலக்கு கிடையாது. சம்பந்தபட்ட நபர், ஊழல் வழக்குக்காக எதிர்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பண தடுப்புச் சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு (FAQ) நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
தாமாக முன்வந்து கருப்புப் பணம் விவரத்தை அளிப்பவர்கள் மீது வருமான வரி சட்ட நடவடிக்கைகள்தான் எடுக்கப்படுமே தவிர, அவர்கள் மீது கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படாது. அதாவது அரசு அளித்த 90 நாள் அவகாசத்துக்குள் தகவல் அளிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அரசு அளித்த தவணைக் காலமான செப்டம்பர் 30-ம் தேதியன்று ஒருவர் தாமாக முன்வந்து தகவல் அளித்து அது அரசுக்கு தெரியாது போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ள நிதியமைச்சகம், அத்தகைய சூழலில் குறிப்பிட்ட தொகைக்கு 30 சதவீத வருமான வரியும் அதற்கு நிகரான அபராதமும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் செலுத்திவிட்டு அவர் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமாக முன்வந்து கருப்புப் பணத்தைத் தாக்கல் செய்பவர்களுக்கு நான்கு வகையான சட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதாவது வருமான வரிச் சட்டம், சொத்து வரிச் சட்டம், நிறுவன சட்டம் மற்றும் சுங்கவரிச் சட்டம், அந்நியச் செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (ஃபெமா) ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர் சேர்த்த வெளிநாட்டில் பதுக்கிய சொத்துகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் விற்பனை மூலம் சேர்க்கப்பட்டதாயிருந்தால் அவருக்கு வன விலங்கு தடுப்புச் சட்டம் 1972-ன் கீழ் விலக்கு கிடைக்காது என்றும் இது தொடர்பான பிற சட்டங்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– தி இந்து