இந்தியா, பொருளாதாரம்

இனியும் ஒத்து வராது..” சீனாவை விட்டுவிட்டு வெளியேறும் ஆப்பிள்? இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர் தான்

டெல்லி: ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருக்கும் தனது உற்பத்தியைக் குறைத்துக் கொண்டு, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019இல் சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா, அனைத்து நாடுகளிலும் பரவி ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால் பொருளாதார இழப்புகள் மறுபுறம் மோசமாக இருந்தது.

சீனாவில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது சீனாவை நம்பி இருந்த நிறுவனங்களை மிகக் கடுமையாகப் பாதித்தது.

சீனா

குறைந்த விலையில் தொழிலாளர்கள் கிடைப்பதால், முக்கிய டெக் நிறுவனங்களின் உற்பத்தி நிலையமாகச் சீனாவே இருந்து வந்தது. இந்தச் சூழலில் கடந்த 2020இல் சீனாவில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால், உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலி அப்படியே ஸ்தமித்தது. இதனால் அப்போதே சீனாவுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்க டெக் நிறுவனங்கள் முடிவு செய்தன.

ஆப்பிள்

சீனாவின் இந்த ஊரடங்கு அறிவிப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ ஆப்பிள் நிறுவனம் தான். ஏனென்றால், ஐபோன், ஐபேட், மேக்புக் என ஆப்பிள் தயாரிப்புகளில் சுமார் 90% சீனாவில் தான் தயாரிக்கப்படுகிறது. இப்படியொரு நிலையில், ஊரடங்கு என்பது ஆப்பிள் சாதனங்களின் உற்பத்தியை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. விரைவில் அந்நிறுவனம் ஐபோன் 13ஐ வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், இது பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

மோதல் போக்கு

இது மட்டுமின்றி, சமீப காலமாகவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. டிரம்ப் காலத்தில் இரு நாடுகளும் மாறி மாறி வரியை அதிகரித்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். எனவே, சீனாவை மட்டுமே உற்பத்தியில் நம்பி இருந்தால், அது எப்போது வேண்டுமானாலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அபாயத்தைத் தரும். இதனால், சீனாவுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது.

இந்தியா

ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் அதிக தொழிலாளர்களைச் சீனாவில் குறைந்த செலவில் பணி அமர்த்த முடியும். இப்போது மற்ற நாடுகளில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் யோசிக்கத் தொடங்கும் நிலையில், அதன் முதல் சாய்ஸாக இந்தியாவே உள்ளது. ஏனென்றால், இங்கும் அதிக தொழிலாளர்கள் எளிதாகக் கிடைப்பார்கள். மொபைல் அசெம்ளி திட்டங்களுக்கு மத்திய அரசும் சில சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.

மொபைல் உற்பத்தி

பல்வேறு காரணங்களால் கடந்த 2020 முதலே சீனாவுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளைத் தொடங்கின. கொரோனா லாக்டவுன் இந்த நடவடிக்கையை வேகப்படுத்தவே செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் கூட உற்பத்தி புதிய ஐபோன் மாடல்கள் உற்பத்தி தீவிரமாக நடைபெறுகிறது. ஆப்பிளை போலவே மற்ற நிறுவனங்களும் சீனாவை விட்டு வெளியே வரும் போது, இந்தியா முதல் சாயஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவை உற்பத்தி மொபைல் Hubஆக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *