இந்தியா, சிந்தனைக் களம், பொருளாதாரம், விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலையை மக்களின் வயிற்றில் அடித்துசம்பாதிக்கும் மத்திய அரசு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு,  சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு  வந்தது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது. தற்போது, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் உள்ளது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களிடமே தரப்பட்டுள்ளது.
ஒருபுறம் எண்ணெய் நிறுவனங்கள் தங்களது லாபத்தைக் கருத்தில் கொண்டு விலையை நிர்ணயம் செய்கின்றன. மறுபுறம் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விற்பனையில் கிடைக்கும் வரியை குறைக்காமல், தங்களது வரி வருவாயை பெருக்கிக் கொள்கின்றன. மொத்தத்தில் விலை உயர்வு, வரி ஆகியவை பொதுமக்களின் தலையில்தான் வைக்கப்படுகிறது. உண்மையில்  பொதுமக்களின் மீது அக்கறை இருந்தால், பெட்ரோல், டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும். அப்படி  வந்திருந்தால் இந்த அளவுக்கு வரி உயர்வு இருக்காது.

தற்போதும் பொதுமக்களின் தலையில் இருந்து சுமையை இறக்காமல், தானாக கிடைக்கும் லாபத்தை பிடுங்கிக் கொள்ளும் வேலையை செய்துள்ளது  மத்திய அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால், அதன் நன்மையை பொதுமக்களுக்கு  கிடைத்துவிடாமல் சதி செய்கின்றன மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும். சர்வதேச சந்தையில் ஒரு ரூபாய் உயர்ந்தால் கூட, உடனடியாக  இங்கு விலையை ஏற்றும் எண்ணெய் நிறுவனங்கள், இப்போது பாதிக்குப் பாதி என்ற அளவில்தான் கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. ஆனால்,  விலையை குறைக்காமல் காலம் தாழ்த்து வது ஏன்? இது மக்களின் வயிற்றில் அடித்துசம்பாதிக்கும் செயலுக்கு நிகரானது.இது இப்படி இருக்க நேற்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு திடீரென லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ளது. அதாவது  எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைப்பது போன்று குறைக்கும். அதை மக்களுக்கு கிடைத்து விடாமல், பிடுங்குவது போன்று எடுத்துக்  கொள்ளும் மத்திய அரசு என்பதுபோல் ஆகிவிட்டது கதை. யானைப்புக்க புலம் போல் சொன்னவர்கள், யானை தானே அள்ளிக்கொண்டு சாப்பிட நினைத்தால் என்ன ஆகும் என்பதை மத்திய அரசுக்கும் விளக்கினால் சரி.

www.dinakaran.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *