கட்டுரை, தமிழ்நாடு, மருத்துவம்

சென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

மழை தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது. மழை துயரம் அல்ல; வெள்ளம் பெரும் துயரம். எனினும், சில நாட்களில் நாம் மீண்டுவிட முடியும். உண்மையான சவால் எதுவென்றால், வெள்ளத்தின் தொடர்ச்சியாக வரும் சுகாதாரக் கேடுகள். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? ஒரு வழிகாட்டி.

வெள்ளம் சுமந்து வரும் மாசுக்கள்

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகில் மக்களுக்குப் பேரிடர் தந்த வெள்ளங்கள் மொத்தம் 14 என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவை தந்துள்ள அனுபவம் சொல்லும் மிக முக்கியமான செய்தி இதுதான்: வெள்ளம் ஏற்படும்போது ஏற்படுகிற உயிரிழப்புகளைவிட வெள்ளம் வடிந்த பின்னர் உண்டாகிற நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதுதான் அதிகம்.

என்ன காரணம்? வெள்ளம் அடித்துவரும் சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய்க் கழிவுகள், பலதரப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள், வேதிக் கழிவுகள், விவசாயத் தோட்டக் கழிவுகள், இறந்த மனித உடல் சிதைவுகள் என எல்லாமும் கலந்த தண்ணீர் வீதிகளில் தேங்கும்போது, ஆபத்து தருகின்ற பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிக் கிருமிகள் கோடிக்கணக்கில் வளர்ந்துவிடுகின்றன. இந்த வெள்ளநீரும் வீட்டுக் குழாய்களில் வரும் குடிநீரும் கலந்துவிடுமானால், குடிநீர் மாசடைந்து, வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, சீதபேதி, குடல்புழுத் தொல்லை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் வரிசைகட்டி வருகின்றன. தேங்கும் வெள்ளநீரில் ஈக்கள், பூச்சிகள், வண்டுகள், கொசுக்கள் என எல்லாமே கூடாரம் அமைத்துத் தொற்றுநோய்களை அடுத்தவர்களுக்கு எளிதில் பரப்பிவிடுகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு மாநகராட்சியால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மிகவும் சுத்தமாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். நம்முடைய அரசின் நிலை நமக்குத் தெரியும். நமக்கு நாமே காத்துக்கொள்வது எப்படி?

குடிநீரைச் சுத்தப்படுத்த

வெள்ள பாதிப்புக்குப் பிறகு வீட்டுக் குழாய்களில் வரும் குடிநீர் பல வண்ணங்களில் வரலாம். குறைந்தது ஒரு மாத காலத்துக்கு அதை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நாம் குடிக்கப் பயன்படுத்தும் எந்த ஒரு தண்ணீரையும் அது புட்டியில் அல்லது கேனில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் சுத்தமான பருத்தித் துணியில் வடிகட்டி, குறைந்தது 10 நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து, ஆற வைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு தரும்.

தண்ணீரை மைக்ரோ ஓவனில் கொதிக்கவைப்பது இன்னும் நல்லது. விரைவாகவும் கொதிக்க வைத்துவிடலாம்.

தண்ணீரைக் கொதிக்கவைப்பதால் அதிலுள்ள பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிக் கிருமிகள் அனைத்தும் இறந்துவிடும்; தண்ணீர் சுத்தமாகும்.

கொதிக்கவைத்த அதே பாத்திரத்திலிருந்துதான் தண்ணீரைக் குடிக்கவும் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வேறு பாத்திரத்துக்கு மாற்றுவதைத் தவிர்ப்பதும், பாத்திரத்துக்குள் கைவிட்டு தண்ணீர் எடுப்பதையும் தவிர்ப்பது நலம்.

அடுத்த வழி இது. தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கு குளோரின் மாத்திரை மற்றும் அயோடின் மாத்திரை இருக்கிறது. அரை கிராம் குளோரின் மாத்திரை 20 லிட்டர் தண்ணீரைச் சுத்தப்படுத்தும்.

குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தப்படுத்த

குடிநீரைத் தேக்கும் கீழ்நிலைத்தொட்டிகளையும் மேல்நிலைத்தொட்டிகளையும் உடனடியாகக் கழுவிச் சுத்தப்படுத்தி, உலரவிட வேண்டும். பின் பிளீச்சிங் பவுடரைத் தெளித்துவிட்டு, தண்ணீரை இறக்கி அதையே பயன்படுத்த வேண்டும். இதேபோல், கிணற்றுத் தண்ணீரிலும் பிளிச்சீங் பவுடரைக் கலந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இந்தப் பயன்பாட்டில் முக்கியமானது, பிளீச்சிங் பவுடரின் அளவு. இரண்டரை கிராம் பிளீச்சிங் பவுடர் ஆயிரம் லிட்டர் தண்ணீரைச் சுத்தமாக்கும். தண்ணீர்த் தொட்டி / கிணற்றின் கொள்ளவைப் பொருத்து, ஒரு வாளித் தண்ணீரில் 100 கிராம் பிளீச்சிங் பவுடரைக் கலந்து பசைபோல் செய்துகொண்டு அதன் பின்னர் 4 மடங்குத் தண்ணீரைக் கலந்து நன்றாக கலக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வாளியில் உள்ள குளோரின் தண்ணீரை மட்டும் நீரில் கலக்க வேண்டும்.

தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க எச்சரிக்கைகள்

அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் சுடுநீரில் கை கால்களைக் கழுவ வேண்டியது முக்கியம். வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முகம், கை, கால்களை சோப்பு போட்டு நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.

தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாடவிட வேண்டாம். குடிநீர்ப் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் உணவைச் சாப்பிடுவதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

மழைக் காலத்தில் பேக்கரி பண்டங்களையும் எண்ணெய்ப் பண்டங்களையும் அசைவ உணவுகளையும் குறைத்துக்கொண்டு ஆவியில் அவித்த உணவுகளை அதிகரித்துக்கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் வராது.

சத்தான காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். இதன் பலனால் வெள்ள பாதிப்பால் ஏற்படுகிற நோய்கள் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மின்தடைப் பிரச்சினைகள்

வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெறும்போது அடிக்கடி மின்தடை ஏற்படலாம். இதன் விளைவால் குடிதண்ணீர் சுத்தகரிக்கப்படாமலே வீடுகளுக்கு வந்துசேரலாம். குளிர்ப்பதனப்பெட்டிகளில் பாதுகாக்கப்படும் உணவுகளில் பூஞ்சைகள் விரைவில் வளர்ந்துவிடலாம். இதனால் அந்த உணவுகள் கெட்டுவிட வாய்ப்புண்டு. எனவே, சில மாதங்களுக்குக் குளிர்ப்பதனப்பெட்டிகளில் பாதுகாக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிருங்கள். உடனுக்குடன் சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.

குளிர்ப்பதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படும் உயிர் காக்கும் ஊசி மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைத் தகுந்த பாதுகாப்பு உறைகளில் மூடிவைத்து மின்தடை உள்ள நேரங்களில் மண்பானைத் தண்ணீரில் வைத்துப் பாதுகாக்கலாம்.

உதவும் தடுப்பூசிகள்

வெள்ளப் பாதிப்பால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சல், ஃபுளு காய்ச்சல், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்றவற்றைத் தடுக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

கொசுக்களால் பரவும் நோய்கள்

கனமழை காரணமாகத் தெருக்களில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விட்டு விட்டுக் குளிர்க்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்க லாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் சிக்குன் குனியா. மூட்டுவலியுடன் உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால் அது டெங்கு காய்ச்சலின் அறிகுறி.

கொசுக்களைக் கட்டுப்படுத்த வழி

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு வலையைப் பயன்படுத்தலாம். உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளை அணியலாம்; கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம். கொசுவை விரட்டும் களிம்புகளை உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுச் சுவர்களில் டி.டி.டி. மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியும். இதேபோல, வீட்டுக் குடிநீர்த்தொட்டிகளில் ‘டெலிபாஸ்’மருந்தைக் கலப்பதும் நல்ல பலன் தரும்.

தெருக்களில் வாரம் ஒருமுறை ‘டெல்டா மெத்திரின்’ கொசு மருந்து தெளிக்க வேண்டியதும் ‘கிரிசால்’ கொசுப் புகை போட வேண்டியதும் முக்கியம். தெருக்களைச் சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்களும் கொசுக்களும் வராது.

ஆஸ்துமா அவதியைத் தவிர்க்க!

வீட்டுக்குள் வெள்ளம் புகுந்திருந்தால் அந்தச் சுவர்களில் பச்சை வண்ணத்தில் பூஞ்சைக் கிருமிகள் வளர்ந்துவிடும். இவை வீட்டில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆஸ்துமா, ஓயாத இருமல், அடுக்குத் தும்மல் போன்ற தொல்லைகளை வரவழைக்கும். குறிப்பாக குழந்தைகள் இரவு நேரத்தில் சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க வீட்டுச் சுவர்களை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தப்படுத்தி, வெண் சுண்ணாம்பு அடித்துவிட்டால் பூஞ்சைகள் அழிந்துவிடும். ஆஸ்துமா வராது.

வெள்ளத்தால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்ளத் திட்டமிட்டுச் செயல்படுவோம்!

– கு. கணேசன், பொது மருத்துவர்,

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *