அரசியல், இந்தியா, கட்டுரை, சட்டம், சிந்தனைக் களம், போராட்டம், விமர்சனம்

குடியுரிமை திருத்த மசோதா ஒரு தீர்வு அல்ல

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த திருத்தம். இந்த திருத்தம் ஒரு சதவீதம்கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது அல்ல, சட்ட விரோதமாக எல்லை நுழைவை கட்டுப்படுத்தவே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது, சிறுபான்மை மக்களுக்கு எதிரான திருத்தம் இல்லையென்றால், மேற்கண்ட பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் ஏன் சேர்க்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் வாதம் வைக்கின்றன. இலங்கை போரில் துன்பங்களை அனுபவித்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை? என்ற கேள்வியும் எழுகிறது.



இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை இந்த சட்டத்தின் மூலம் நாடு கடத்த முடியும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, நாம் அனைவரும் தனித்தனியாக இந்தியாவின் பூர்வகுடிகள் என நிரூபிக்க அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரானதாக கருதப்படும் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு, அ.தி.மு.க. அரசு ஆதரவு அளித்தது தமிழக மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம்  தீவிரம் அடைந்து வருகிறது. அசாம், டெல்லி, மேற்கு வங்கம்,  ஐதராபாத், பீகார், உத்தரபிரதேசம், கேரளா, தமிழ்நாடு என நாட்டின் பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம்  நடந்து வருகிறது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை தொடர்ந்து, நாட்டின் பிற பகுதிகளிலும் மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவது, போராட்டத்தை இன்னும் தூண்டும் வகையில் உள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவும் இந்த அசாதாரண சூழலுக்கு  தீர்வு என்ன? அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது என்றால், ஆட்சியாளர்கள் அதை பெரும் ஆபத்தாக உணரவேண்டும். மாணவர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, மசோதாவில் தேவையான மாற்றங்களை கொண்டுவந்து, எல்லோரும் ஏற்கும் வகையில் அமைதி வழியில் நிரந்தர தீர்வு காணவேண்டும். இதுவே ஆட்சியாளர்களுக்கு அழகு.  ஜனநாயக வழியில் நடக்கும் போராட்டத்தை நசுக்க, எந்த வகையிலும் அடக்குமுறையை ஏவி விடக்கூடாது. இது, ஒருபோதும் தீர்வை தராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *