கோவையில் இந்து முன்னணிப் பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டதும் அதைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் அங்கு நடந்த வன்முறைச் சம்பவங்களும் இவற்றின் தொடர்ச்சியாக சென்னையில் பாஜக நடத்திய போராட்டத்தில் நடந்திருக்கும் கல் வீச்சும் மோசமான சமிக்ஞைகள்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார், ஒரு வாரத்துக்கு முன் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். எந்தக் காரணத்தை முன்னிட்டு நடந்திருந்தாலும் கொலை கண்டிக்கப்பட வேண்டியது; கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், இது தொடர்பாக காவல் துறை இன்னும் யாரையும் கைதுசெய்யாத சூழலில், உடனடியாக இனம்சார் கொலையாக இதைக் கட்டமைத்து, கலவரத்தை உருவாக்கி, பொது அமைதியைக் குலைப்பது மிக அபாயகரமான அரசியல் உத்தி மட்டும் அல்ல; சமூகக் குற்றமும்கூட.
கோவையிலும் திருப்பூரிலும் அன்றைய தினம் நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான ஒவ்வொரு காணொலியுமே காவல் துறையின் தோல்வியை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது, முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டதில் தொடங்கி, ‘தேச பக்தி’ எனும் முகமூடியில் “உயிரோடு கொளுத்துவோம்” என்று மாணவர்கள் அமைப்பினர் கொடுத்த பகிரங்கக் கொலை மிரட்டல் பேட்டிகள் வரை ஒவ்வொரு நிகழ்வும் ‘காவல் துறை என்ன செய்தது; தமிழக அரசு எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது?’ என்ற கேள்விகளையே உருவாக்குகிறது.
வன்முறைக்கான எல்லா சாத்தியங்களையும் உணர்ந்திருந்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, கடுமையான தடுப்பு நடவடிக்கைகளையோ கோவை காவல் துறை எடுக்கவில்லை. இனியேனும் விழித்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி கடும் நடவடிக்கைகளைக் காவல் துறை எடுக்க வேண்டும்.
சென்னையில் இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “தமிழகத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். தவிர, இஸ்லாமிய அமைப்புகள் சிலவற்றின் தலைவர்கள் இனவெறியூட்டும் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். உரிய ஆதாரங்களைக் கொடுத்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டினர். இது உண்மையென்றால், கடுமையான நடவடிக்கைக்கு உரிய விவகாரம் இது. அதேசமயம், சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டியது. ஒருபோதும் இனவெறியூட்டும் கலவரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலான வாதங்களாக இவை ஆக முடியாது. அதேபோல, காவல் துறைக்கு மதச்சாயம் பூசும் பாஜகவின் முயற்சியும் கண்டனத்துக்கு உரியது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மையமான கோவை, 1998-க்குப் பின் மீண்டும் எதிர்கொண்ட இந்தக் கலவரம், கோவை மக்களையும் தொழில் சமூகத்தையும் பெரிதும் கவலையில் தள்ளியிருப்பதை உணர முடிகிறது. சமூக அமைதியும், சமூகங்களிடையேயான நல்லிணக்கமும் தான் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளங்கள். இன்றைக்குத் தொழில் முனைவுக் கலாச்சாரத்துக்கு மாநிலத்துக்கே முன்னுதாரணமாக விளங்கும் கோவைக்கு, இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டுவதற்கான வழிகளை வெளியிலிருந்து யாரும் பாடம் நடத்தத் தேவை இல்லை. 1998 கலவரங்களுக்குப் பின், எவ்வளவு சீக்கிரம் பழைய நல்லிணக்கச் சூழலை மீண்டும் கோவை மீட்டெடுத்தது என்பதை யாரும் இன்னமும் மறந்துவிடவில்லை. கோவை மக்கள் மீண்டும் இன்னொரு அமைதி யுத்தத்துக்கு ஒன்றுபட்டுத் தயாராக வேண்டும்!
– தி இந்து