தீவிரமான சூறாவளி, கடுமையான அனல் காற்று, வரலாறு காணாத வறட்சி, சீறிப் பொங்கும் கடல் மட்டம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் இனி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அகதிகளாக வேறு நாடுகளில் இடம் தேடப் போகிறார்கள்; அப்படி வெளியேறப்போகும் ஏழைகளும் நலிவுற்ற பிரிவினரும் எந்த நாட்டிலும் அகதி என்று கூறி புகலிடம் தேடக்கூட ‘ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மாநாடு’ சட்டப்பூர்வ உரிமையைத் தரவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
திட்டவட்டமாகத் தெரியவில்லை என்றாலும் இந்த ஆண்டில் இதுவரையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் சிரியா, ஆப்கானிஸ்தான், எரித்ரியா போன்ற நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டை காரணமாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழையவரும் அகதிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போலீஸார் அல்லது ராணுவத்தினர் விரட்டும் அவலக் காட்சிகளைப் பார்த்து வருகிறோம். எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து கடலுக்குள் விழுந்துவிடலாம் என்ற நிலையிலும் படகில் எறும்புகளைப்போல தொற்றிக்கொண்டு வரும் ஏராளமான அகதிகளைக் கரைக்குச் சற்றுத் தொலைவிலேயே தடுத்து திருப்பி விரட்டும் மனிதாபிமானமற்ற காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. தாய் அல்லது தந்தையுடனோ தனியாகவோ வரும் சின்னஞ்சிறு குழந்தைகள் புதிய இடத்தில் புதியவர்களின் மிரட்டலைப் பார்த்து கதறியழும் காட்சிகளைக் காணக்கூட முடியாதபடிக்கு கண்ணீர் திரையிடுகிறது.
மற்றொமோர் அபாயம்
உள்நாட்டுக் கலவரங்களால் அகதிகளாக அப்பாவி மக்கள் வெளியேறும் இந்தக் காட்சிகள், இன்னும் சில ஆண்டுகளில் பருவமழை தவறியதால் பஞ்சம் பிழைப்பதற்காகத் தண்ணீர் வளம் உள்ள பிற நாடுகளைத் தேடிச் செல்லும் அகதிகளைக் கொண்டதாக இருந்துவிடக்கூடாதே என்றே மனது துடிக்கிறது. சூறாவளி, அனல் காற்று, வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் இனி மக்கள் தங்களுடைய மாநிலங்களிலேயே ஓரளவுக்குத் தண்ணீர் இருக்கும் பகுதிகள் அல்லது தங்கள் நாட்டிலேயே தண்ணீர் வளம் உள்ள மாநிலங்கள் அல்லது பக்கத்து நாடுகள் ஆகியவற்றுக்குக் குடிபெயர்வதைத் தவிர வேறு வழியே இருக்காது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற ‘ஸ்டெர்ன் ஆய்வி’ன்படி இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் மட்டும் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 20 கோடிப்பேர் இடம் பெயரப் போகிறார்கள்.
மூழ்கப்போகும் தீவுகள்
பசிபிக் பெருங்கடலையொட்டிய துவாலு மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவு போன்றவை கடல் நீர் மட்டத்தைவிட சில அடிகள்தான் உயரமாக உள்ளன. கடலின் நீர்மட்டம் உயரும்போது இத்தகைய தீவு நாடுகளின் பெரும்பகுதி அல்லது முழுப்பகுதியுமே கடலில் மூழ்கிவிடும். இத்தீவுகளின் மக்கள் தொகை அதிகம் இல்லையென்றாலும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஆனால் அவர்கள் எந்த நாட்டிலும் ‘அகதி’ என்ற உரிமையைக் கோரிப் பெற முடியாது. உள்நாட்டுக் கலவரம், போர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோரும் இனம், மதம், மொழி காரணமாகத் துன்புறுத்தப்படுவோரும், அரசியல் காரணங்களால் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை போன்றவற்றை எதிர்கொள்வோரும் மட்டுமே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதியாகச் செல்ல முடியும்.
பருவமழை மாறுதல்களால் பாதிக்கப் படும் நாடுகளைவிட்டு முதலில் வெளியேறப் போகிறவர்கள் பரம ஏழைகளாகவும் நலிவுற்ற பிரிவினராகவும்தான் இருப்பார்கள். பசுங்குடில் இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் அவர்களுடய ஏழை நாட்டுக்குப் பங்குகூட அதிகம் இருக்காது. இருந்தாலும் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட நேரும். உலக அளவில், வெப்ப நிலையை மேலும் 2 டிகிரி சென்டிகிரேடு உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை மேலும் 1.5 டிகிரி உயராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திருத்துமாறு ‘சிறு தீவு நாடுகளின் கூட்டமைப்பு’ (ஏ.ஓ.எஸ்.ஐ.எஸ்.) கோரியிருப்பது கவனிக்கத் தக்கது. அதே வேளையில், வெறும் தீர்மானத்தை மட்டும் இயற்றிவிட்டு உருப்படியான நடவடிக்கை எதையும் உலக நாடுகள் எடுக்காததால் உண்மையில் உலக வெப்பநிலை இப்போதிருப்பதைவிட மேலும் 4 டிகிரி சென்டிகிரேடு உயரப் போகிறது என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
கங்கை, பிரம்மபுத்திரா: எச்சரிக்கை
கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி டெல்டா பகுதிகள் கடல்மட்டத்தையொட்டியுள்ள தாழ்வான பகுதிகள். கடல் பொங்கினால் இப்பகுதிகள் கடலில் மூழ்கக்கூடிய ஆபத்துகள் அதிகம். கடலோரத்திலிருந்து சுமார் 33 அடி தொலைவில் அதிக மக்கள் வசிக்கும் பிரதேசங்கள் உலகில் ஏராளம். உலக மக்கள் தொகையில் சுமார் 10% இத்தகைய இடங்களில்தான் வாழ்கிறார்கள். வங்கதேசம் இதற்கு நல்ல உதாரணம். எனவே கடல் கொந்தளிப்பில் இந்தப் பகுதிகள் மூழ்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதைத் தடுக்க, கடலோரத்தில் கோட்டையைப் போல மதில் சுவர்களை எழுப்புவதால் எந்தப் பலனும் இல்லை. பிராந்திய அளவில் நாடுகளுக்குள் ஒப்பந்தங்கள், கூட்டு நடவடிக்கை, பயிற்சி, திறன் வளர்ப்பு, பருவநிலை மாறுதல் குறித்தத் தகவல் பரிமாற்றம், நவீனத் தொழில்நுட்பப் பயன்பாடு, வெற்றிகளிலிருந்து கிட்டிய பாடங்கள், தோல்வி தந்த அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம்தான் மோசமான விளைவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும். ஒருவேளை நம் நாட்டின் ஏழைகளும் நலிவுற்ற பிரிவினர்களும் வெளியேற நேர்ந்தாலும் வெளி நாடுகளில் அவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பும் அதிக ஊதியமும் கிடைக்க தொழில் பயிற்சி அளித்து அவர்களுடைய திறன்களைக் கூட்டுவது அவசியமானதாகும்.
இழப்பும் சேதமும்
பருவநிலை மாறுதல் தொடர்பான ஐ.நா. மாநாட்டு கட்டமைப்பானது ‘இழப்பு சேதங்கள்’ பற்றி கவனம் செலுத்துகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் உயரும் என்று எச்சரித்த பிறகும் அதைத் தடுக்க முடியாத நிலைமை குறித்து அதில் ஆராயப்படுகிறது. புவி வெப்பம் அதிகரித்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பது, பசுங்குடில் இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது, மாறிய நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுவது, உயர் வெப்ப நிலையிலும் வாழ முற்படுவது என்பதிலிருந்து இது முற்றிலும் வேறுபடுகிறது. இதற்கான மாநாடு வார்சா நகரில் 2013-ல் நடைபெற்றது. இழப்பு, சேதங்கள் தொடர்பாக புதிய வழிமுறைகளை ஏற்படுத்த அப்போது முடிவு செய்யப்பட்டது. பசுங்குடில் இல்லம் வெளியேற்றும் வாயுவைக் கட்டுப்படுத்திய பிறகும், மாறிய பருவநிலைக்கேற்ப வாழும் வழியை சமூகம் ஏற்றுக்கொண்ட பிறகும் மக்களுக்கும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் அடித்தளக் கட்டமைப்புக்கும் இழப்பும் சேதங்களும் ஏற்படுவது நிச்சயம். இங்கே இழப்பு என்பது, கடல் கொந்தளிப்பால் இழக்கும் வாழிடங்கள், புவியமைப்பிடம், மனித உயிர்கள் போன்றவற்றைக் குறிக்கிறது; சேதம் என்பது, அடித்தளக் கட்டமைப்புகளுக்கும் சொத்துகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறிக்கிறது. சேதங்களைப் பழுதுபார்க்க வாய்ப்பு உண்டு. இழப்பிலும் சேதத்திலும் பொருளாதாரம் சார்ந்தவையும் உண்டு, பொருளாதாரம் சாராத மற்றவையும் உண்டு.
இழப்பு, சேதம் ஆகியவற்றை ஈடுகட்ட ஐக்கிய நாடுகள் சபைக்கு பணக்கார நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. பசுமைக்குடில் இல்லங்களிலிருந்து வெளியேறும் வாயுக்களில் பெரும்பகுதி பணக்கார நாடுகளைச் சேர்ந்தவைதான் என்பதால் அவை இந்த இழப்புகளையும் சேதங்களையும் ஈடுகட்ட கடமைப்பட்டவை. பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சில் இது இடம் பெறுமா, உடன்பாட்டில் இது சேர்க்கப்படுமா என்று தெரியவில்லை.
2016-ல் நடைபெறவுள்ள மறு ஆய்வுக் கூட்டத்தில் இழப்பு சேதம் குறித்து ஆராயப்படும். பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இது முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது வளரும் நாடுகளின் விருப்பம். இதை மூன்றாவது உலக நாடுகளின் வலையமைப்பைச் சேர்ந்த இந்திரஜித் போஸ் தெரிவிக்கிறார்.
ஐரோப்பாவில் இப்போது குவியும் அகதிகள் நமக்கு ஒரு நினைவூட்டல்தான். வெறும் பசுங்குடில் இல்ல வாயுக்களைக் குறைப்பதைப் பற்றி மட்டும் பேசினால் போதாது. டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற ஒத்த கருத்துள்ள வளரும் நாடுகள் இழப்பு, சேதங்கள் குறித்து முக்கியத்துவம் தந்து பேசியிருக்கின்றன. பாரீஸ் மாநாட்டில் இது முக்கிய கவனத்தைப் பெற்றால் இப்போது ஐரோப்பாவில் குவியும் அகதிகளைப் போல எதிர்காலத்தில் குவியப்போகும் மக்களுக்கு உதவிகளை அளிக்கவும் நெருக்கடிகளைச் சமாளிக்கவும் உதவும்.
-சுஜாதா பைரவன்,
அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை மையத்தின் முதன்மை அறிவியல் ஆய்வாளர்,
சுருக்கமாகத் தமிழில்: சாரி
– தி இந்து