இந்தியா, சிந்தனைக் களம், பயங்கரவாதம், போராட்டம், விமர்சனம்

மதத்தை அறிய ஆடையை கழற்ற முயன்ற டெல்லி வன்முறை கும்பல்.. வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதில் 16 உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியே பெரும் போர்க்களமாக மாறிக் கிடக்கிறது. வடகிழக்கு டெல்லியில் அரங்கேற்றப்பட்ட வன்முறை கோரதாண்டவங்களை பதிவு செய்ய பத்திரிகையாளர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களின் கேமராக்களை பறித்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வன்முறை கும்பல் அழித்திருக்கிறது. டெல்லி வன்முறை கும்பலிடம் சிக்கிய டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளர் தமக்கு நேர்ந்த கொடூரத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். அவரது இந்த வாக்குமூலம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மதத்தை அடையாளம் காண முயற்சி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையாளரின் அனுபவம்: பகல் 12.15 மணியளவில் மாஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வன்முறை நடக்கும் இடத்திற்குச் செல்லும் திகிலூட்டும் அனுபவம் தொடங்கியது. ஒருவர் திடீரென்று என் நெற்றியில் பொட்டு வைத்துவிடுவதாக கூறி என்னை நெருங்கினார். அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் மூலம் என்னை இந்துவா முஸ்லிமா என அடையாளம் காண முயற்சிக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டேன். அப்போது நான், நான் பத்திரிகை புகைப்படக்காரன். என்னை எனது பணியைச் செய்யவிடுங்கள் என்றேன். உடனே அவர் நீங்கள் இந்துவா? பாயா எனக் கேட்டார். மீண்டும் அவரிடம் நான் பத்திரிகைக்காரன் என்று கூறிவிட்டு சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டேன்.

முழக்கங்கள் எழுப்பியபடி தாக்குதல் சிறிது தூரத்தில், அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையே கல்வீச்சு தொடங்கியது. மோடி.. மோடி.. என்று முழக்கங்களை கூறியபடி ஒருதரப்பினர் கற்களை வீசித் தாக்கத் தொடங்கினார்கள். வானத்தில் திடீரென பரவிய கருப்பு புகையைக் கண்டு அப்பகுதியை நோக்கி ஓடினேன்.அப்போது தடுத்து நிறுத்திய கும்பல், அங்கே போகாதீர்கள் என்றனர். நான் புகைப்படம் எடுக்கவே செல்வதாகக் கூறினேன். மீண்டும் அவர்களில் ஒருவர் நீங்கள் இந்துவா முஸ்லிமா என கேட்டார். நான் பதில் சொல்லாமல் இருந்ததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

இந்துக்கள் விழித்து கொண்டோம் அப்போது மற்றொருவர், நீங்கள் இந்து என்றால் அங்கு ஏன் செல்கிறீர்கள்? டெல்லியில் உள்ள இந்துக்கள் இன்றுதான் விழித்துக் கொண்டுள்ளார்கள். என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள் என்று கூறினார். அவர்களிடம் பேசிக்கொண்டே வேறொரு வழியாக அப்பகுதிக்குள் நுழைய முயன்றேன். அங்கிருந்த ஒரு சுவரின் அருகில் இருந்து புகைப்படம் எடுக்கத் துவங்கினேன். திடீரென்று மூங்கில் குச்சிகளையும் பெரிய இரும்பு ஆயுதங்களையும் கொண்டு என்னைச் சுற்றிவளைத்தார்கள்.

ஆடையை கழற்றுவோம் அவர்களும் முன்பு கேட்டதுப்போலவே நீங்கள் இந்துவா? முஸ்லிமா? எனக் கேட்டார்கள். நான் பதில் சொல்ல மறுக்க, பதில் சொல்லவில்லை என்றால் உனது ஆடைகளைக் கழற்றி நீங்கள் எந்த மதத்தவர் என்று உறுதி செய்வோம் என்று அச்சுறுத்தினார்கள். நான் கைகூப்பி, நான் புகைப்படக்காரன் என்று சொன்னேன். பின்னர் அவர்கள் என்னை மேலும் அச்சுறுத்தினார்கள். “என்னை விடுங்கள். நான் சாதாரண புகைப்படக்காரர்தான்” என்று சொன்னேன். எனது கேமராவை பறிக்க முயன்றனர். என்னை அச்சுறுத்தும் வகையில் தாக்கவும் முற்பட்டனர். அப்போது அருகில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் அக்கும்பலிடம் இருந்து என்னை மீட்டார். பின்னர் அங்கிருந்து புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என எண்ணி என்னுடைய அலுவலக வாகனத்தை தேடினேன். வாகனம் இல்லாததால் ஆட்டோவை தேடிச்சேன்றேன். சுமார் 1 கி.மீ தூரம் சென்றுதான் ஆட்டோவையே தேடிப் பிடித்தேன்.

கெஞ்சியதால் உயிர் பிழைத்தோம் நான் நடந்து சென்ற பகுதி முழுவதும் கற்கள் நிறைந்த பாதையாக, உடைந்த கண்ணாடி, எரிக்கப்பட்ட டயர்களாகவே காட்சி அளித்தது. அப்போது அங்கிருந்த ஆட்டோவில் நான் செல்லவேண்டிய இடத்தைக் கூறியதும் அவர் தயக்கத்துடன் சம்மதித்து ஆட்டோவை இயக்கினார். சிறிது தூரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று நான் சென்ற ஆட்டோவை நிறுத்தினார்கள். ஆட்டோவில் இருந்த என்னை என் சட்டைக் காலரை பிடித்து வெளியே இழுத்தார்கள். நான் பத்திரிகையாளர் என்று எனது அடையாள அட்டையைக் காட்டினேன். எங்களை விட்டுவிடுமாறு அவர்களிடம் கெஞ்சினேன். அவர்களிடம் இருந்து உயிர் தப்பியதே பெரிய விஷயம்தான். இவ்வாறு அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இதுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Source: www.tamil.oneindia.com

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *