இந்தியா, கட்டுரை, விமர்சனம்

கனவு நனவானதா? – விவேகானந்தர்

Vivekanandaஇளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை நகர்த்த உங்கள் தோள்களைக் கொடுங்கள்.’ “இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்’- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள்.

சமயத் துறவியாக இருந்தாலும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய உரைகள் பல. அவரது உரைகள் இளைஞர்களைத் தட்டி எழுப்புபவையாக இருந்தன.

“சுதந்திரம் வேண்டும் என்றால், அதை என்னால் எளிதில் கொண்டு வர முடியும். ஆனால், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வலிமையான பாரதத்தை இளைஞர்களால்தான் உருவாக்க முடியும். அவர்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து, 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னரும் அத்தகைய மகானின் கனவு நனவானதா? இல்லையே.

விவேகானந்தர் போன்றவர்களை அரசியல் தலைவர்கள்தான் அவ்வப்போது நினைவுகூர்கிறார்களே தவிர, இளைஞர்கள் அவர்களைப் பற்றி கவலை கொள்வதில்லை.

அத்தகைய மகான்களின் ஜயந்தியன்று அரசு விடுமுறை அறிவித்தது என்றால், அந்த நாளை திரையரங்குகளிலும், பூங்காக்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் செலவிடுவதையே முக்கியப் பணியாகக் கொண்டுள்ளனர்.

15 வயதில் இருந்து 35 வயது வரை உள்ளோரை இளைஞர்கள் என்று கூறுகின்றனர். இத்தகைய இளைஞர்கள்தான் நாட்டின் வருங்காலத் தூண்கள் என்று வர்ணிக்கின்றனர். அரசியல் கட்சிகள்கூட இளைஞர் அணியின் பலத்தையே பெரிய பலமாக நம்பி இருக்கின்றன.

ஆனால், இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோரின் செயல்களை எண்ணிப் பார்க்கும்போது, அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருப்பார்களா என்பது சந்தேகமே.

தற்போதைய சூழ்நிலையில், சுய முன்னேற்றத்துக்குக் கூட பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி மேற்கொள்வதில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

இளமைப் பருவம் என்பது துடிப்புமிக்க பருவம். கனவுகளை சுமந்து திரியும் பருவம். ஆனால், இன்றைய இளைஞர்களின் பாதை திசை மாறிச் செல்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு எது பாதகமாக விளங்குகிறதோ, அதைத்தான் இன்றைய இளைஞர்கள் செய்கின்றனர்.

இவை பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வழிவகுக்கின்றன. அன்னிய சக்திகளின் ஊடுருவலுக்கும் வழிவகுக்கின்றன.

வருங்காலத் தூண்கள் வழிதவறிச் செல்கின்றன. கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, காலை காட்சியைக் காண திரையரங்கில் அமர்ந்திருக்கின்றனர்.

கல்லூரியில் ஒரு பாடவேளைக்கு ஆசிரியர் வரவில்லையென்றால், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரியில் உள்ள சிற்றுண்டியிலும், ஓய்வறைகளிலுமே காண முடிகிறது. ஒரு சில மாணவ, மாணவியரைத்தான் நூலகங்களில் காணலாம்.

மாணவர்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள் என்று கூறவில்லை. அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை என்றே கூறலாம்.

தற்போது புதிய வழக்கம் ஒன்று பள்ளி, கல்லூரிகளில் புகுந்துள்ளது. அதாவது, குழுவாக சேர்ந்து கொண்டு தங்களுக்குள் மோதிக் கொண்டு, உயிரை மாய்த்துக் கொள்வது. இதுதான் விவேகானந்தர் கண்ட கனவா?

அமெரிக்காவின் சிகாகோ நகரில் விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் “அமெரிக்க சகோதர-சகோதரிகளே’ என்று தொடங்கி நிகழ்த்திய உரை அந்நாட்டு மக்களின் மனதில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம்.

அதற்கு முதல்நாள் வரை சாதாரண துறவியாக இருந்த அவர், அடுத்த நாள் முதல் அந்த நாட்டு மக்கள் போற்றும் மகானாக விளங்கினார்.

இந்த உரையின்போது, “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று இவற்றால் உண்டான மதவெறி… இவை இந்த உலகத்தை இறுக்கமாகப் பற்றியுள்ளன.

மேலும் உலகை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்த கொடியச் செயல்கள் இல்லாமல் இருந்திருந்தால், மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயரிய நிலையை அடைந்திருக்கும்’ என்று முழங்கினார்.

அந்த மகான் இன்றிருந்தாலும், அவரது சீற்றம் குறைந்திருக்காது. ஏனென்றால், இப்போது மதவெறியும், குரோதமும், பொறமையும் அப்போதிருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துள்ளன.

அதனால், ஏராளமான இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஒன்றுமறியாத அப்பாவி இளைஞர்கள் இவற்றுக்கு பலிகடா ஆகின்றனர்.

“மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற கொள்கையின் அடிப்படையிலேயே ராமகிருஷ்ண மடம் துவங்கப்பட்டது. அச்சேவையை இன்று துறவியர் பின்பற்றி வருவதை நாம் நன்கு அறிவோம்.

ஆனால், வேறு சிலர் தங்களது மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற ரீதியில் செயல்பட்டு வருகின்றனர்.

வீரத்துறவி கூறியபடி, நாட்டை சீர்ப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்கு இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இதுவே இந்த நேரத்துத் தேவை.

By பா. ராஜா

-தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *