புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தரத் தயார் என, அந்நாடு அறிவித்துள்ளதால், பட்டியலை விரைவாக வழங்குமாறு, மத்திய அரசு, சுவிஸ் நாட்டுக்கு கடிதம் எழுதிஉள்ளது.
முறைகேடான பணம்
இந்தியாவில் முறைகேடாக பணத்தை சம்பாதித்த சிலர், அந்தப் பணத்தை இங்கு வைத்திருந்தால் பிரச்னையாகும் என கருதி, முறைகேடான வழிகளில், சுவிஸ், சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளின் வங்கிகளில் பதுக்கியுள்ளனர்.சுவிஸ் நாட்டு வங்கியில் உள்ள அந்த பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர, முந்தைய, பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போதைய நிதியமைச்சர், சிதம்பரம், நான்கு முறை கடிதங்கள் எழுதியும், அந்த தகவல்களை வழங்க சுவிஸ் அரசு மற்றும் அந்நாட்டு வங்கிகள் மறுத்தன.
இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டு அதிகாரி ஒருவர், பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் பட்டியலை தரத் தயார் என, அறிவித்தார். அதையடுத்து, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி உத்தரவின் படி, நிதித் துறை அதிகாரிகள், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு கடிதம் எழுதி, பதுக்கியோர் பட்டியலை வழங்குமாறு கேட்டுள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழுவும், தன் நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.
பல வழிகளில்…
இதற்கிடையே, சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை வெளியே கொண்டு வருவதில் புதிய சிக்கலாக, அந்த பணம், தங்கம், வைரம், பங்குகள் மற்றும் ‘பிட்காயின்’ போன்ற முறைகளில், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.கறுப்பு பண முதலைகள் பட்டியலை வழங்க தயாராக உள்ள சுவிட்சர்லாந்து அரசு, தன் வாடிக்கையாளர்களை காட்டிக் கொடுக்க விரும்பாமல், பல ஆண்டுகளாக தாமதப்படுத்தி வந்தது. இந்த காலகட்டத்தில், சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியிருந்த பணத்தை, பணமாக வெளியே கொண்டு செல்லாமல், தங்கம், வைரமாகக் கொண்டு செல்ல அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏனெனில், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டில், சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் தங்கம் ஏற்றுமதி நடந்துள்ளது. இதுவும் போக, கலைப் பொருட்கள் விற்பனை, பங்கு வர்த்தகத்தில் முதலீடு போன்ற ரீதியிலும், பதுக்கப்பட்ட கறுப்பு பணம் கரைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர்