அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்!

கடந்த சில மாதங்களாகக் காப்பு வரியைப் பரஸ்பரத் தாக்குதலுக்கான ஆயுதமாக வைத்து எச்சரித்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் சீனாவும், தற்போது வர்த்தகப் போரில் நேரடியாக இறங்கியிருக்கின்றன. இரு நாடுகளும், இறக்குமதிப் பொருட்கள் மீது 25% காப்பு வரியைப் பரஸ்பரம் விதித்துக்கொண்டுள்ளன. இதன் மதிப்பு 3,400 கோடி அமெரிக்க டாலர்கள். ‘பொருளாதார வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய வர்த்தகப் போர்’ என்று சீனா வர்ணிக்கிறது. உலகம் இதுவரை பார்த்துள்ள பெரிய போர்களைவிட இது ஒன்றும் பெரிதல்ல என்றாலும் உலகப் பொருளாதாரத்துக்குக் கணிசமான நாசத்தை விளைவிக்கக்கூடியது இது என்பதில் சந்தேகமில்லை.

சீனத்திலிருந்து இறக்குமதியாகும் சூரியஒளி மின்சாரத் தயாரிப்பு சாதனங்கள், சலவை இயந்திரங்கள் ஆகியவற்றின் மீது காப்பு வரியை விதித்த டிரம்ப், சீனத்தின் அனைத்துப் பொருட்கள் மீதும் அடுத்து வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். இதை டிரம்ப் ஆதரவாளர்கள் வேண்டுமானால் ரசிக்கக்கூடும். ஆனால், அமெரிக்காவிடம் சீனா வாங்குவது குறைவாகவும், விற்பது அதிகமாகவும் இருப்பதால் வெளிவர்த்தகப் பற்றாக்குறை அமெரிக்காவுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவுக்குப் பதிலடி தரும் வகையில், அங்கிருந்து வரும் சோயாபீன்ஸ், மோட்டார் வாகனங்கள், உதிரிபாகங்கள் போன்றவற்றுக்கு சீனாவும் காப்பு வரியை விதித்திருக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏராளமானவர்கள் வேலையிழப்பார்கள். ஐரோப்பிய ஒன்றியம், மெக்ஸிகோ, கனடா ஆகியவையும்கூடப் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீது காப்பு வரி விதித்துள்ளன.

உலகம் சுருங்கிவிட்ட நிலையில் எந்த நாடும் தனக்குப் பாதிப்பு இல்லாமல் காப்பு வரி விதித்துப் பிழைத்துக்கொள்ள முடியாது. வரிவிதிப்பதால் பொருட்களின் விலை உயர்ந்து நுகர்வோருக்குச் சுமையைக் கூட்டும் என்பதுடன், உற்பத்தியில் ஈடுபடும் தொழில்முனைவோர்களுக்கு உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். அது அவர்களுடைய லாபத்தையும் ஏற்றுமதியையும் விற்பனையையும் சரித்துவிடும். பல இறக்குமதிகள் அத்தியாவசியமானவை. அவற்றுக்குத் தடை விதித்தாலோ, அதிகமாக வரி விதித்தாலோ வர்த்தகச் சங்கிலியே அறுபட்டுவிடும். உலக வர்த்தகத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் அதை உரிய அமைப்பு மத்தியஸ்தம் செய்து தீர்த்துவந்தது. இப்போது அந்த விதிகளை மதிக்காமல் நேரடியாகக் காப்பு வரி விதித்து களத்தில் மோதிக்கொண்டால் உலக வர்த்தகம் சுருங்கிவிடும். அது உற்பத்தி, வேலைவாய்ப்பு, வருமானம் என்று எல்லாவற்றையும் பாதிக்கும்.

இந்நிலை தொடர்ந்தால் வர்த்தகத்தைப் பெருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பல நாடுகள், தங்களுடைய செலாவணியின் மாற்று மதிப்பைத் தாங்களாகவே குறைத்துக்கொள்ளவும் முன்வரலாம். தொடக்கத்தில் இது ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருந்தாலும், பிறகு அனைவருக்குமே ஆபத்தாக முடியும். மிகவும் மெதுவாகத்தான் மீண்டுவருகிறது உலகப் பொருளாதாரம். அதற்குள் இப்படித் தேவையற்ற அதிர்ச்சிகளை அரசியல் உள்நோக்கத்துடன் அளித்தால் பொருளாதாரத்தால் அதைத் தாங்கவே முடியாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP