இஸ்லாம் மதத்துக்கு மாறி காதல் திருமணம் செய்துகொண்ட கேரளத்தைச் சேர்ந்த ஹாதியாவை அவரது பெற்றோரிடமிருந்து விடுவித்ததன் மூலம், விருப்பமான மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அவரது சுதந்திரத்தையும், எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம் எனும் சுதந்திரத்தையும் பாதுகாத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தனது கணவருடன் சேர்ந்து வாழவும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றவும் விரும்பிய ஹாதியா, அவரது விருப்பத்துக்கு மாறாக, அவரது பெற்றோருடன் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரவு இது.
ஐஎஸ் இயக்கத்தில் ஹாதியா சேர்க்கப்பட சாத்தியக்கூறு இருக்கிறது என்பது போன்ற வாதங்களின் அடிப்படையில் அவரது சுதந்திரத்தைத் தடை செய்யாமல் நீதிமன்றம் அவருக்குத் தனிநபர் உரிமையை வலியுறுத்தியிருப்பது திருப்தியளிக்கிறது.
அகிலா எனும் இயற்பெயர் கொண்ட ஹாதியா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிவருகிறார். ஹாதியா அவரது விருப்பம் இல்லாமலேயே மத மாற்றம் செய்யப்பட்டார் என்றும் ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டதாகவும் அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் இரண்டு முறை நீதிமன்ற விசாரணையை ஹாதியா எதிர்கொள்ள வேண்டிவந்தது.
சேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் படித்துவந்த ஹாதியா, மதம் மாறியது தொடர்பாக அவரது தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஷாஃபின் ஜஹான் எனும் இஸ்லாமியரை மணந்துகொண்டதாக ஹாதியா கூறியதையடுத்து, அவரது திருமணம் சட்டரீதியாக நடக்கவில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேலத்தில் ஹாதியாவுக்குத் தனது படிப்பைத் தொடர அனுமதி வழங்கியிருக்கிறது.
திருமண வயதை எட்டியிருந்தாலும்கூட, சரியான முடிவெடுக்க இயலாத வயது என்பதால், ஒரு பெண்ணின் திருமணத்தில் அவரது பெற்றோரும் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது ஆச்சரியம் தருகிறது. திருமண வயதை அடைந்த ஒரு பெண்ணின் உரிமைகள், நீதிமன்ற உத்தரவுகள் காரணமாகத் தடைபடுவது என்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஆணாக இருந்தால், இப்படிப்பட்ட கருத்துகள் எழுந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. அதேசமயம், ஹாதியாவை ஐஎஸ் அமைப்பில் சேர்க்க முயற்சி நடந்ததா என்பது தொடர்பான விசாரணையைத் தேசியப் புலனாய்வு அமைப்பு தொடரலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
எந்த விசாரணையாக இருந்தாலும், ஒருவரின் தனிமனித உரிமையை விலையாகக் கொடுத்துதான் அதை நிரூபிக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. தான் விரும்பிய சுதந்திரம் தனக்குக் கிடைக்கவில்லை என்று ஹாதியா தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.