தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; அதை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்துக்குள் இழுத்து மூட வேண்டும்; புதிய மணல் குவாரிகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தின் தேவை கருதி வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யலாம். தமிழகத்தின் ஆறுகள் பாழாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை. இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை. மேலும் மணல் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.