இந்தியா, சட்டம், தமிழ்நாடு, விமர்சனம்

மாநிலங்கள் உரிமையில் விழும் அடுத்த இடி… ஐ.ஜே.எஸ்!

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களைத் தனது கொலிஜியப் பரிந்துரை மூலம் நியமிக்கும் பொறுப்பைத் தனது கையில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், தற்போது அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கின் மூலம் இந்தியாவில் அகில இந்திய நீதிபதிகள் சேவையை (All India Judicial Service) உருவாக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் நியமனங்களும் மையப்படுத்தப்பட்டு, அகில இந்திய அடிப்படையில் தேர்வுசெய்யப்படும். இன்றுவரை கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனம், மாநில அரசுகளின் பொறுப்பில் இருந்துவருகிறது. இதை மாற்ற வேண்டிய அவசியம் தேவைதானா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் உரிய கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். அந்த நீதிபதிகளை நாடாளுமன்றத் தின் கண்டனத் தீர்மானம் மூலம் மட்டுமே பதவிநீக்கம் செய்ய முடியும். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பினும், உயர் நீதிமன் றங்களை நிறுவி அதற்கான செலவினங்களின் பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்ததே. ஆனால், கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனங்கள் இருவகைப்பட்டவை. மாவட்ட நீதிபதிகளை அந்தந்த உயர் நீதிமன்றங்களே நேரடியாக நியமனம்செய்யும். ஆனால், அதற்குக் கீழுள்ள நீதிபதிகளை (உரிமையியல் நீதிபதி, குற்றவியல் நடுவர்) அந்தந்த மாநிலத் தேர்வாணையங் கள் நியமனம் செய்யும். கீழமை நீதிமன்ற நீதிபதிகள் அந்தந்த மாநில ஆளுநரின் பெயரில் மாநில அரசால் நியமிக்கப்பட்டாலும், அவர்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் பதவி நீக்கும் அதிகாரமும் அந்தந்த உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்தவையே. அதில் மாநில அரசு தலையிட முடியாது. இதுபோன்ற அமைப்பு முறை பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 1935-ம் வருட இந்திய அரசு சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டது.

அதிகாரம் யாரிடம்?

காலனி ஆட்சிக் காலங்களில் இந்திய குடிமைப் பணி யில் சேர விரும்புபவர்கள், அதற்காக லண்டனில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். தேர்ச்சி பெற்றபின் இந்திய குடிமைப் பணியில் அவர்கள் நிர்வாக அதிகாரியாக வருவதற்கோ (அ) நீதித் துறைப் பணிக்கோ செல்ல முடியும். தற்போது இருப்பதுபோல் நீதித் துறை அதிகாரவர்க்கத்திலிருந்து தனியாக பிரித்து வைக்கப்படாத காலம் அது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 50-வது பிரிவு நீதித் துறையை அதிகாரிகள் அமைப்பிலிருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும் என்று அரசுக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்சிப் பணியை அதிகாரிகள் நிர்வாக நடுவர்களாகச் சில அதிகாரங்களைச் செலுத்தினாலும், 1973-ம் வருட குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்வாக நடுவர்களுக்கு நீதித் துறைப் பணியினை அளிப்பதைத் தடுத்துவிட்டது.

மாநில அரசின் சேவையாகக் கருதப்பட்ட கீழமை நீதித் துறை சேவையை அகில இந்திய சேவையாக மாற்றும் எண்ணம் எப்போது எழுந்தது? 1946-ல் சர்தார் படேல் தலைமையில் நடந்த ஒரு மாநாட்டில் இதுபற்றி விவாதிக்கப்பட்டபோது 1949-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத் தீர்மானத்தில் அதற்கான அடிப்படை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 312-வது பிரிவு அகில இந்திய சேவைகளை (ஏற்கெனவே உள்ள இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உட்பட) புதிய அகில இந்திய சேவைகளை மாநிலங்களவையில் சட்டம் இயற்றுவதன் மூலம் புதிதாக உருவாக்க முடியும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. மாநிலங்களவை மாநிலங்களின் நலனைப் பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தில் இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் அயல்நாட்டு சேவை, இந்திய சட்ட சேவை, வன சேவை, ரயில்வே சேவை, தணிக்கை மற்றும் கணக்கீட்டுச் சேவை, வருமானவரிச் சேவை என்று பல சேவைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அகில இந்திய நீதித் துறை சேவை உருவாக்கப்படவில்லை.

சட்டத் திருத்தம்

1958-ம் வருடம் சட்ட ஆணையம் இதுபற்றிப் பரிந்துரைத்தது. ஆனால், 1960-ல் நடைபெற்ற சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர், நெருக்கடிக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்தைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஸ்வரண் சிங் குழு இதற்கான சட்டத் திருத்தத்தைப் பரிந்துரைத்தது. அந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்ட இந்திரா காந்தி, அரசமைப்புச் சட்டத்துக்கு விரிவான திருத்தங்களை 42-வது அரசமைப்புச் சட்டத்தின் மூலம் கொண்டுவந்தார். 312-வது பிரிவில் இந்திய நீதித் துறை சேவையை (மாவட்ட நீதிபதிகளுக்கு மட்டும்) மாநில அவை விரும்பினால் சட்டத்தின் மூலம் உருவாக்குவதற்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர், 8-வது சட்ட ஆணையமும் 116-வது சட்ட ஆணையப் பரிந்துரையும் இதற்கான ஆலோசனையை வழங்கியபோதும் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

1989-ம் வருடம் குஜராத் மாநிலத்தில் உள்ள நாடியட் மாவட்டத்தின் தலைமை குற்றவியல் நடுவர், காவலர்களால் கைதுசெய்யப்பட்டு வீதிகளில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நீதித் துறையை அதிரவைத்தது. அதையொட்டி 29.9.1989 அன்று நாட்டிலுள்ள அனைத்துக் கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் நீதிமன்றப் புறக்கணிப்புக்கு வேண்டுகோள் விட்டனர். இதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் அந்தக் காவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சுயமாக எடுத்து நடத்தித் தண்டனை வழங்கியது. நீதிமன்ற நடுவர்கள் மீது வைக்கப்படும் குற்றவியல் வழக்குகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் முறைகள் வகுக்கப்பட்டன.

இச்சம்பவத்துக்குப் பிறகு, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அகில இந்திய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் சார்பில் போடப்பட்ட வழக்கில், (1992) உச்ச நீதிமன்றம் நாடு முழுதும் உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சீரான பணிநிலைமைகளை உருவாக்க முற்பட்டது. அதன் மூலம் பதவிகளின் புதிய பெயர் சூட்டல், ஓய்வு வயது, ஒரேவிதமான ஊதிய நிர்ணயம் மற்ற கட்டமைப்பு வசதிகள் இவற்றையெல்லாம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான புதிய ஊதிய விகிதங்களை மற்ற அரசு ஊழியர்களுடன் ஒப்பிடாமல் தனித்து வழங்க ஒரு ஊதிய ஆணையத்தையும் பின்னர் ஏற்படுத்தியது. அந்த ஊதிய ஆணைக் குழு கொடுத்த ஊதிய விகிதங்களை எல்லா மாநில அரசுகளும் நிறைவேற்றும் படி உத்தரவிடப்பட்டது. மேலும் கீழமை நீதிமன்றங்களின் பணிகளை ஒரேமாதிரியாகச் சீரமைக்கும் வகையில் மாநில அரசு ஊழியர் விதிகளைத் திருத்தவும் உத்தரவிடப்பட்டது. தற்போது மூன்றாவது நீதிபதிகள் ஊதிய ஆணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் அகில இந்திய நீதிபதிகள் சங்கத்தால் போடப்பட்ட பொதுநல வழக்குகளில் முடிவுசெய்யப் பட்டன.

நீதிபதிகள் சேவை அவசியமா?

அகில இந்திய நீதிபதிகள் சங்கம் முதன் முதலில் போட்ட வழக்கில் (1991) உச்ச நீதிமன்றம் அகில இந்திய நீதிபதிகள் சேவையை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வுசெய்ய மத்திய அரசு ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல்செய்தது. அந்த மனுவில் இந்தத் திருத்தம் மாநிலங்களின் உரிமை யைப் பறிப்பதாகவும், ஒரே மாதிரியான பணிநிலைமை என்பது அந்தந்த மாநிலத்துக்குள்தான் இருக்க முடியுமே தவிர, ஒரு மாநிலத்துக்கும், மற்றொரு மாநிலத்துக்கும் ஒரே பணி நிலைமை இருப்பது அவசியமில்லை என்றும், மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்றும் மத்திய அரசு கூறியது. இந்த வாதங்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டம் பிரிவு 312-ன் கீழ் மாநிலங்களவையில் புதிய சட்டத்தை உருவாக்க முடியும் என்றும் கூறியது.

நாடாளுமன்றத்தின் நிலைக்குழு 2006-ம் வருடம் அகில இந்திய நீதிபதிகள் சேவை பற்றி கருத்து கோரியது. அதன்படி மத்திய சட்ட அமைச்சகம் எல்லா உயர் நீதிமன்றங்களின் கருத்தை அறிய விரும்பியது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா இது பற்றி கூட்டிய சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மறுபடியும் 2012-ம் வருடம் மத்திய அமைச்சரவையின் குறிப்புடன் ஒரு மாதிரி மசோதா அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டது. 18 நீதிமன்றங்கள் தங்களது கருத்தைத் தெரிவித்ததில் பெரும்பான்மையான நீதிமன்றங்கள் இக்கருத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்தன. மறுபடியும் 2013-ல் நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் ஒரு சில தலைமை நீதிபதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் பாஜக தலைவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய நீதிபதிகள் சேவையை உருவாக்க வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். மீண்டும் உயர் நீதிமன்றங்களின் கருத்தை அறிய உச்ச நீதிமன்றம் விரும்பியது.

கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் இதுபற்றி விவாதம் வந்தபோது, அவர்களது கருத்தை அறிய ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. அதன்படி 25 நீதிபதிகள் ஆதரவாகவும், 23 நீதிபதிகள் எதிர்ப்பையும் பதிவுசெய்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக் குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கருத்தை ஏன் மாற்றிக் கொண்டனர் என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை. ஆனால், அகில இந்திய நீதிபதிகள் சேவை தேவைதானா என்பதைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இதுவரை போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வருந்தத்தக்கது.

மாநிலங்கள் உரிமையைப் பிரதிபலிக்கிறதா

மாநிலங்களவை?

அரசமைப்புச் சட்டம் பிரிவு 312 உருவாக்கியபோது, டாக்டர் அம்பேத்கர் புதிய சேவைகளை உருவாக்குவதற்கு மாநிலங்களவைக்குச் சட்டம் இயற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அந்த அவை மாநிலங்களின் நலனைப் பிரதிபலிக்கும் என்று கூறினார். ஆனால், மாநிலங்களவை உண்மையிலேயே மாநிலங்களின் நலனைப் பிரதிபலிக்கின்றனவா என்பது சந்தேகமே. இன்று மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டியது அவசியமில்லை.

இல.கணேசன் மத்திய பிரதேசத்தையும், ப.சிதம்பரம் குஜராத்தையும், நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தையும்தான், தாங்கள் அம்மாநிலங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால் அம்மாநிலங்களையே பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். கர்நாடக காவிரி நீர் தூதுக் குழுவில் நிர்மலா சீதாராமன் சென்றதைப் பார்த்தோம். மேலும் 2003-ம் வருடம் நாடாளுமன்ற சட்டத் திருத்தத்தின் மூலம் மாநிலங்களவைக்குப் போட்டியிடும் வேட்பாளர் அதே மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ரத்துசெய்யப்பட்டது. இதை எதிர்த்து பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் போட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது (2006). எனவே, மாநிலங்களவை மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இனி செல்லுபடி ஆகாது.

மேலும், 1956-ம் வருட மாநிலங்கள் சீரமைப்புச் சட்டத்தின் படி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத் தில் 1969-ம் வருட தமிழக ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தமிழகத்தின் அலுவல் மொழி தமிழ். கீழமை நீதிமன்றங்களில் 1976-ம் வருட சட்டத் திருத்தத்தின் படி நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல்மொழியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் 1982-ல் நடைமுறைக்கு வந்தபோது, அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வினால் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி கீழமை நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக அந்தந்த மாநில மொழிகள் நடைமுறைக்கு வரும் நிலையில், அகில இந்திய நீதித் துறை சேவை என்று கூறுவது மொழிவாரி மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். அதை மாநிலங்களவை செய்ய முன்வராதபோது, பொதுநல வழக்கொன்றின் மூலம் நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமைகளைப் பறிப்பதற்கும், நீதிமன்றங்களின் செயல்பாட்டைப் பரவலாக ஜனநாயகப்படுத்துவதைத் தடுப்பதற்கும் எவருக்கும் உரிமையில்லை.

ட்டம் இயற்றும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதைத்தான் சட்ட தினத்தன்று சட்ட அமைச்சர் வலியுறுத்தினார். அரசின் மூன்று அங்கங்களான நீதிமன்றம், சட்ட மன்றம் மற்றும் அரசாங்கங்கள் இவை தங்களுக்குள் வகுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் செயல்பட வேண்டுமேயொழிய, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு எந்த அங்கத்துக்கும் உரிமை இல்லை. தமிழக அரசியல் கட்சிகளும் இதுபற்றி வாய்மூடி மௌனியாக இருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை!

– கே.சந்துரு, முன்னாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

-நன்றி தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *