உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்கள் நாட்டில் புகுந்த ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது வங்கதேசம். இது தொடர்பாக மியான்மருடன் வங்கதேசம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், பெரும் இன்னல்களுக்கு ஆளாகி அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மீண்டும் மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படுவது மிகவும் கொடுமையானது.
மியான்மரின் ராக்கைன் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கியாக்களைக் கடுமையாக ஒடுக்கியதுடன் அவர்களுடைய வீடுகளுக்கும் தீ வைத்தனர். ஏராளமானோர் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளான மியான்மர் அகதிகள், புகலிடம் தேடி வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்றனர்.
மியான்மரும் வங்கதேசமும் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக உடன்பாடு காண வேண்டும் என்ற சீனாவின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கும் முன்னதாக, ‘ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என்று மியான்மர் அரசு அறிவிக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாதது மியான்மர் அரசின் போக்கைத் தெளிவாக உணர்த்துகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்துவதில் சீனா காட்டியிருக்கும் தீவிரத்துக்கு அதன் சொந்த நலனே காரணம். சீனா உருவாக்கிவரும் பட்டுப்பாதையை ஆசியாவின் பிற நாடுகளுடன் இணைப்பதற்கான சங்கிலியில் ராக்கைன் முக்கியக் கண்ணியாக இருக்கிறது. ராக்கைனில் அமைதி ஏற்படாமல், மியான்மர் ராணுவத்துக்கும் ரோஹிங்கியாக்களுக்கும் ஆயுத மோதல்கள் நிகழ்ந்தால், அது சீனத்தின் பட்டுப்பாதை என்ற பொருளாதாரத் திட்டத்துக்குப் பெரிய இடையூறாக மாறிவிடும். எனவே, இரு நாடுகளுக்கும் சீனா நெருக்குதல் தந்து, உடன்பாட்டில் கையெழுத்திட வைத்திருக்கிறது.
அகதிகளைத் திருப்பி அனுப்ப முடிவுசெய்யப்பட்டிருக்கிறதே தவிர, எத்தனை பேர் அனுப்பப்படுவார்கள், அவர்கள் எங்கே மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள், எரிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் வீடுகள் கட்டித்தரப்படுமா – புதிய இடமா, எத்தனை மாதங்களுக்குள் அகதிகள் திரும்பிச் செல்வார்கள் என்ற தகவல்கள் இந்த உடன்பாட்டில் இல்லை.
சீனத்தின் பொருளாதார உதவிகள் மட்டும் அகதிகள் திரும்பப் போதுமானதல்ல; இரண்டாம்தரக் குடிமக்களாக, கல்வி – வேலைவாய்ப்பில் போதிய வாய்ப்புகளின்றி நடத்தப்படுவதை ரோஹிங்கியாக்கள் விரும்பவில்லை. மதமும் தாய்மொழியும் வேறாக இருந்தாலும், தங்களையும் மியான்மர் குடிமக்களாக, சம அந்தஸ்தில் அரசு நடத்த வேண்டும் என்று ரோஹிங்கியாக்கள் விரும்புகின்றனர். இது அரசியல்ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. மியான்மர் அரசு மனது வைத்தால் மட்டும்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும்!