சிந்தனைக் களம், சுற்றுப்புறம், தமிழ்நாடு

பெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்?

handling flood in tamilnadu

handling flood in tamilnaduஇந்தியாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை, ஒட்டுமொத்த பொருளாதாரத் துக்கும் நல்ல அறிகுறியை உணர்த்தினாலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மனம் பதறவைக்கின்றன. மழை வருவதற்கு முன்பே, நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த உயிரிழப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியப் பெருங்கடலில் நிலவும் சாதகமான சூழ்நிலைகளால் மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகம், கொங்கணக் கடற்கரை, கேரள மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் மலைப் பிரதேசங்களை ஒட்டிய பகுதிகளிலும் மிகவும் கனமழை பெய்துவருகிறது. இது சத்தீஸ்கர், ஒடிஷா, வங்கம் ஆகிய கிழக்குப் பிராந்தியங்களுக்கும் நீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், வழக்கமான அளவுக்குக் கனமழை பெய்திருக்கிறது. எனினும், கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தையும், 2015 சென்னை பெருமழை வெள்ளத்தையும் வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய மழையால் உயிரிழப்பு, உடைமைகள் இழப்பு, வாழிடத்திலிருந்து வெளியேற்றப்படுதல் போன்ற அபாயங்கள் அதிகரித்திருக்கின்றன.

மழை வருவதற்கு முன்பே மழைநீர் சேமிப்பு அமைப்பை உறுதிப்படுத்துதல், கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தணிக்கையைச் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மாநிலங்கள் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கும்போது, மாறிவரும் காலநிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் மழைப்பொழிவு குறுகிய காலத்துக்கு, அதுவும் எப்போது பெய்யும் என்று தீர்மானிக்க முடியாததாகவும் கனமழையாகவும் இருக்கும். இந்நிலையில், ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இயற்கைப் பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கும், வெள்ளத்தின் பாதிப்பைத் தணிப்பதற்கும் உரிய கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டும்.

வெள்ள பாதிப்புகள் என்பவை நீண்ட காலமாய் இந்தியாவை பீடித்திருப்பவை. இதனால், மனித உயிரிழப்புகளும் கால்நடை உயிரிழப்புகளும் ஏற்பட்டுப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. ஆகையால், திட்டமிடல் மூலம் மீள்தன்மையை அதிகரிப்பது அவசியம். குறிப்பாக, விரிந்துகொண்டே செல்லும் பெருநகரங்களிலும் நகரங்களிலும் விரிவான திட்டமிடல் முக்கியம். நகர்ப்புற மேம்பாட்டைச் சீராகத் திட்டமிடுதல் என்பது நீடித்த நிலைப்புத் தன்மைக்கும் மிகவும் அத்தியாவசியமானது.

மும்பை, சென்னை பெருமழை வெள்ளங்கள் ஏற்கெனவே இதைத் தெளிவாக நமக்கு உணர்த்தியுள்ளன. அப்படித் திட்டமிடுவதில் மாநில அரசுகள் காட்டும் அலட்சியம் மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், ஆறுகள், வடிகால்கள் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் தயக்கம் காட்டுவது சரியல்ல.

இன்னும் சில தசாப்தங்களில் உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக மாறப்போகும் இந்தியா, தொடர்ச்சியான வறட்சி, வெள்ளம் போன்றவற்றுக்கு எதிரான போரை இரட்டை உத்வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீரியல் துறையையும் பாரம்பரிய அறிவையும் ஒருங்கிணைத்து நீர் சேமிப்புக்கும் வெள்ளத் தணிப்புக்குமான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *