அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் எப்படி இவ்வளவு குறைவான விலைக்கு விற்கிறார்கள் என்ற சந்தேகம் பில்லியன் டாலர் கேள்வியாக எல்லாரிடத்திலும் இருக்கிறது? கொஞ்சம் விலாவரியாகப் பார்க்கலாமா?
எப்படி முடியும்?
எங்கள் நிறுவனம் சிபேடு என்ற டேப்ளட் தயாரிப்பதற்காகச் சீன நிறுவனங்களை அணுகியபோது பலதரப்பட்ட விலைப் படிவங்கள் வந்தவண்ணம் இருந்தன. நண்பரின் ஆலோசனைப்படி எக்சலில் வரிசைப்படுத்திப் பார்த்தபோது ஏறக்குறைய எல்லா நிறுவனங்களின் விலையும் ஒரே மாதிரி இருந்தன. வந்தவற்றில் பெரும்பாலும் விற்பனை நிறுவனங்கள் மட்டுமே. ஆனால் வாங்கும் எண்ணிக்கையைப் பொறுத்து நிறுவனங்கள் வழங்கும் விலைச் சலுகை, நிறுவனத்திற்கு நிறுவனம் அதிகமாகவே இருந்தது. அவர்களுக்கென்று சொந்தமாக உற்பத்திக் கூடம் இல்லை. அவர்கள் உற்பத்தி நிறுவனங்கள் தரும் தயாரிப்புகளைத் தங்கள் பெயர்களில் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள். எனவே உற்பத்தி நிறுவனங்கள் அவர்களுக்குரிய பங்கினை சேர்த்தே விலை நிர்ணயம் செய்துகொண்டிருக்கும்.
1000 டேப்ளட் பிசி எடுத்தால் இவ்வளவு விலை, 2500 எண்ணிக்கை இவ்வளவு விலை என்று எண்ணிக்கை அதிகமாக அதிகமாக விலை அப்படியே குறைந்துகொண்டே வரும். கடைசியாக 10,000 என்றும் வரும்போது ஏறக்குறை 50% விலை குறைந்திருக்கும். அப்படியிருக்க ஒரு மாதத்தில் ஒரு லட்சம் அலைபேசி விற்பனை எனும்போது அவர்களுக்கு விற்பனை விலையில் எவ்வளவு சதவீதம் தள்ளுபடி கிடைத்திருக்கும்…..
இங்கே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் சந்தை விலையில் 50% என்றாலே மோட்டோ இ (Moto E)யில் விற்பனை விலை 6999, பாதி விலை 3500 ரூபாயில் 1000 ரூபாய் தள்ளுபடி….. மீதம் 2500 ரூபாய் அவர்களுக்கு லாபமே.
600 கோடி ரூபாய் விற்பனையில் 10% லாபம் என்று வைத்தாலும் கூட =? 🙂
ஒரு வருடத்தில் விற்கும் ஒட்டுமொத்த விற்பனை ஒரே மாதத்தில் விற்க வழி இருக்கும்போது, அதன் விலை குறைத்துத் தரப்படும் என்பதுதான் வியாபார நியதி. 🙂
1000 ரூபாய் முதலீடு செய்யும் நாமே 100 ரூபாய் கூட லாபம் பார்க்கலைன்னா எப்படி எனும்போது, கோடிகளில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் லட்சமாவது எதிர்பார்ப்பார்களே!!
இது எங்களைப் போன்ற சிறு நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சவால், பெரு நிறுவனங்களுக்கும் சவால், மலை முழுங்கிகளுக்குப் பிரச்சினையே இல்லை.
சேலத்தில் ரிலையன்ஸ் கூட இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது…..
தமிழக நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இல்லை என்பது கவனத்துக்குரிய செய்தி.
–வெப்துன்யா