கோவா மாநில பேப் இந்தியா ஜவுளிக் கடையில் இருந்து வெளியேறும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி | படம்: அர்விந்த்.
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக பேப் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அம்மாநில கிரைம் பிராஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து போலீஸ் எஸ்.பி. கார்த்திக் கஷ்யாப் கூறும்போது, “இச்சம்பவத்தில் பேப் இந்தியா உயரதிகாரிகள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்” என ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், பேப் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அம்மாநில கிரைம் பிராஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேப் இந்தியா அதிகாரிகளை விசாரிப்பதன் அவசியம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பேப் இந்தியாவுக்கு சொந்தமான ஜவுளிக்கடை கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் உள்ளன. எனவே பேப் இந்தியாவின் மூத்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்வதன் மூலம் அதன் கிளைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்” என்றார்.
முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) கோவா மாநிலத்தில் பேப் இந்தியா என்ற பிரபல ஜவுளிக் கடையில் உடை மாற்றும் இடத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டறிந்து மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்தார். இதனையடுத்து கரீம் லக்கானி, பிரசாந்த் நாயக், ராஜூ பாஞ்சே, பரேஷ் பகத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 மாத தரவுகள்:
கடையில் பரிசோதனை மேற்கொண்ட போலீஸார், “அந்த கேமரா அறையின் உட்பகுதியை நோக்கி தான் இருந்தது. தொடர்ந்து கடையின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளை நாங்கள் சோதித்து பார்த்தோம். அதில் 3 முதல் 4 மாதங்களுக்கான தரவுகள் எங்களிடம் சிக்கின. அவை அனைத்திலும் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் இடம்பெறுபவையாக உள்ளன” என்றனர் என்பது கவனிக்கத்தக்கது.