அரசியல், இந்தியா, உலகம், கட்டுரை

இந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்?

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் பொறுப்பேற்கவிருப்பது புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் காத்திருக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சாதகமான கருத்துகளையே பிரச்சாரத்தின்போது பேசிவந்த இம்ரான், காஷ்மீர் மக்களை ராணுவம் கொண்டு இந்தியா ஒடுக்கிவருவதாகவும் குற்றம்சாட்டினார். அதேசமயம், தேர்தலுக்குப் பிறகான தனது முதல் பேட்டியில், “காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாணத் தயார்” என்று பேசியிருக்கிறார்.

பாகிஸ்தானில், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்ட மன்றங்களின் பொதுத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த நிலையில், இம்ரானின் வெற்றி ஏறத்தாழ ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில், இம்ரானுக்குக் காத்திருக்கும் சவால்கள் அசாதாரணமானவை.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளையும் இந்தியா போன்ற பக்கத்து நாடுகளையும் குறிவைக்கும் பயங்கரவாதக் குழுக்களைக் கட்டுக்குள் வைப்பது முதல் சவால். இத்தனைக் காலம் இந்தக் குழுக்களுக்குப் புகலிடமும் தந்து, ஆயுதம் – பயிற்சிகள் ஆகியவற்றைத் தந்ததும் பாகிஸ்தான் ராணுவமும் உளவுப் படையும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசியபோது இந்தியாவுடனான உறவு குறித்து அதிக நேரம் பேசினார். “சமாதானத்தை நோக்கி இந்தியா ஓரடி எடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி எடுத்து வைக்கும்” என்றும் உறுதியளித்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் பேசியதை இந்தியா ஏற்கவில்லை. இந்தியாவிடம் நவாஸ் ஷெரீஃப் அரசு மென்மையான அணுகுமுறையைக் கையாள்வதாகக் கூறியிருந்தார் இம்ரான் கான். நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை வலு இல்லாமல் ஆட்சியமைக்கிறார். ராணுவத்தின் தயவு அவருக்கு அதிகம் தேவைப்படும். இது இந்திய அரசால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது!

கடுமையான வர்த்தகப் பற்றாக்குறை நிலையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். சீன-பாகிஸ்தான் பொருளாதார நெடுவழி திட்டத்துக்கு செலவழிக்கப்படும் தொகை மூலம் விரைவில் வருவாய் வரும் என்று தோன்றவில்லை. தாலிபான்களைப் பேச்சுக்கு அழைத்து அமைதியை ஏற்படுத்துவது மற்றொரு சவால். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்று பேசிவந்ததால், ‘தாலிபான் கான்’ என்று அழைக்கப்பட்டவர் இம்ரான். இந்நிலையில், அமெரிக்க அரசுடன் அவர் எப்படி ஒத்துழைக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அவருடைய பதவிக்காலமும் இருக்கும்.

பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இந்தியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்துவது, தாலிபான்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பெரிய சோதனைகள் புதிய பிரதமர் இம்ரானுக்காகக் காத்திருக்கின்றன. கூடவே, ‘ஐந்து ஆண்டுகள் முழுவதும் பதவி வகித்த பிரதமர்’ என்ற சாதனையையும் இம்ரான் கான் நிகழ்த்த வேண்டும். முடியுமா? சவால்தான். முடித்திட வாழ்த்துகள்!

-நன்றி ஹிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *