இந்தியா, கட்டுரை, சிந்தனைக் களம், சுற்றுப்புறம்

காற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா

pollution_india

2015-ம் ஆண்டு காற்றின் மாசுபாட்டால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா.

சீனாவை பல விதங்களில் முந்தும் நோக்கத்துடன் செயல்படுவதாக அரசும் அரசு எந்திரங்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எதிர்மறையாக, காற்று மாசுபாடு உயிர்பலியில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.

புதுடெல்லியில் கிரீன்பீஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் மாசுபாட்டால் 2015ம் ஆண்டு நாளொன்றுக்கு இந்தியாவில் 1,641 பேர் மரணமடைந்துள்ளனர். சீனாவில் நாளொன்றுக்கு இதே காரணத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 1,616 என்பது குறிப்பிடத்தக்கது.

சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஆரோக்கிய அளவியல் மற்றும் மதிப்பீடு கழகத்தின் நோய்களின் உலகச் சுமை அளித்த தரவுகளை ஆய்வு செய்து கிரீன்பீஸ் இந்தியா இந்தத்தகவலை வெளியிட்டுள்ளது.

2010-ம் ஆண்டு சீனாவில் நாளொன்றுக்கு காற்றின் மாசுபாடு காரணமாக 1,595 பேர் மரணமடைந்துள்ளனர், இதே ஆண்டில் இந்தியாவில் நாளொன்றுக்கு 1,432 பேர் மரணமடைந்துள்ளனர்.

1990-ம் ஆண்டு இதே காரணத்தினால் இந்தியாவில் நாளொன்றுக்கு மரணமடைவோர் எண்ணிக்கை 1070 ஆக இருந்தது, இது தற்போது 2015-ல் 1641 ஆக அதிகரித்துள்ளது.

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சுனில் தாஹியா கூறும்போது, இந்த நூற்றாண்டில் இந்த விவகாரத்தில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா என்றார்.

சீனா 2005 முதல் 2011 வரை காற்றின் மாசுபாட்டிற்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. மாறாக இந்தியாவில் காற்றில் மாசுபாடு அதிகரித்த வண்ணமே இருந்து 2015-ல் மோசமடைந்துள்ளது.

இதற்கு எதிராக இந்தியா கவனத்துடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்று சுனில் தாஹியா வலியுறுத்தியுள்ளார்.

தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *