இந்தியா, கட்டுரை, கார்டூன், பொருளாதாரம், விமர்சனம்

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது-

நாட்டின் பொருளாதாரம் சுழல் வேகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு துறையாக சிக்கலிலும்ம், வேதனையிலும் உழல்கிறது என்று மோடி அரசு மீது பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார்

வாஜ்பாய் ஆட்சி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. அதன்பின் தற்போது மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

பொருளாதார வீழ்ச்சி

ரூபாய் நோட்டு தடைக்குப்பின் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, சர்வதேச தரநிர்ணய நிறுவனங்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கியும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக குறைந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளன.

நாளேட்டில் கட்டுரை

இந்நிலையில், ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள கட்டுரையில், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாகச் சாடியுள்ளார். ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தியது, வருமானவரித்துறை ரெய்டு நடத்துவது, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது என அனைத்தையும் கடுமையாகக் கண்டித்து தநது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கட்டுரையில் எழுதி இருப்பதாவது-

ஜெட்லி சிதைத்துவிட்டார்

நாட்டின் பொருளாதாரத்தை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த அளவுக்கு குழப்பமான நிலைக்கு கொண்டுவந்து விட்டார். இந்த நிலையில்கூட  அதற்கு நான் கருத்து தெரிவிக்காவிட்டால், எனது தேசியக் கடமையில் இருந்து தவறிவிடுவதாகிவிடுவேன். நாட்டில் ஏழ்மையும், வறுமையும் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதாக பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். அவரின் அரசில் இருக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,  மோடியின் வார்த்தையை உறுதி செய்ய கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்.

வீணடிப்பு

இதற்கு முன் இருந்த நிதி அமைச்சர்களைக் காட்டிலும் அருண் ஜெட்லி மிகவும் அதிர்ஷ்டக்காரர். இவர் நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது, சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்து இருந்தது. அதை சரியாகப் பயன்படுத்தாமல் லட்சக்கணக்கான கோடிகளை ஜெட்லி வீணடித்துவிட்டார்.

தேக்கமடைந்து இருக்கும் திட்டங்கள், வங்கிகளின் வாராக்கடன் ஆகியவற்றை சந்தேகமில்லாமல் சிறப்பாக கையாண்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், அரசின் கவுரப்பிரச்சினையால் பிடிவாத குணத்தால், அந்த விஷயங்களை மேலும் மோசமாக்கிவிட்டது.

வேலைவாய்ப்பு சுருங்கியது

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் தனியார் முதலீடு சுருங்கிவிட்டது. தொழில்துறை உற்பத்தியும் சிதைந்துவிட்டது. நாட்டின் வேளாண்மை நிலை வேதனையில் இருக்கிறது. ஏராளமானோருக்கு வேலை அளிக்கும் கட்டுமானத்துறை உற்சாகம் இழந்து காணப்படுகிறது. சேவை துறை மிகவும் மெதுவாகச் செயலாற்றுகிறது, ஏற்றுமதி நிலை  படிப்படியாகச் சுருங்கிவிட்டது, நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் ்அடுத்தடுத்து வேதனையில் சிக்கி இருக்கிறது.

ரூபாய் நோட்டு தடை

நாட்டின் பொருளாதார பேரழிவுக்கு ரூபாய் நோட்டு தடை முழுக் காரணமாகிவிட்டது, அதற்கு அடுத்தார்போல் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மோசமாக சிந்திக்கப்பட்டு, மிக தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒந்றாகும். இதன் மூலம் நாட்டின் வர்த்தகம் அழிவை நோக்கி தள்ளி, பலரை மூழ்கச் செய்து இருக்கிறது.ரூபாய் நோட்டு தடையின் மூலம் லட்சக்கணக்காண மக்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். புதிய வேலைவாய்ப்புகளை பெறவும், புதிதாக வேலை தேடி வருபவர்களுக்கும் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொரு காலாண்டுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சரிந்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீதத்துக்கு சிரந்து இருக்கிறது.

பழைய முறையில் கணக்கிட்டால்?

கடந்த 2015ம் ஆண்டு மாற்றப்பட்ட கணக்கீடு மூலம் பொருளாதார வளர்ச்சி வீதத்தை கணக்கிட்டதால் பொருளாதார வளர்ச்சி 5.7சதவீதமாக இருக்கிறது. ஒருவேளை மாற்றம் செய்யாமல் பழைய முறையிலேயே கணக்கிட்டு இருந்தால், பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்திருக்கும்.

ஏற்க முடியாது

பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு தொழில்நுட்ப காரணங்கள்தான் என்று அரசு கூறவதை ஏற்க முடியாது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி, அறிக்கையில் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை இருக்கிறது, இது தற்காலிகமாக இருக்காது தொடர்ந்து நிலவும் எனத் தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி சரிவுக்கான காரணத்தை எதிர்பார்க்காமல், அதைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.

ரெய்டு ராஜ்ஜியம்

நாட்டின் சிறு, குறுந்தொழில் துறை ஏற்கெனவே இருக்கின்ற சிக்கல்களோடு முன்னெப்போதும் இல்லாத பிரச்சினையை சந்தித்து வருகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வருவாய் ரூ.65 ஆயிரம் கோடியில் இருந்து, ரூ.95 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வருமான வரித்துறையை பயன்படுத்தி, வருவாயைப் பெருக்க அதிகமான சோதனைகளை நடத்த மத்திய அரசு உத்தரவிடுகிறது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ‘ரெய்டு ராஜ்ஜியத்துக்கு எதிராக கடுமையாக போராடினோம். ஆனால், இன்று அதையே பின்பற்றுகிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *