அரசியல், உலகம், விமர்சனம்

இஸ்ரேல் என்றொரு பெரிய அண்ணன்

israel-a-big-brotherஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பிடித்துவிட வேண்டும் என்று பாலஸ்தீனம் நியாயமாகவே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், பாலஸ்தீனத்துக்கு ‘நாடு’ என்கிற அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா சபையின் பாதுகாப்பு மன்றத்தில் சமீபத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்திருக்கின்றன.

வெறும் ‘பார்வையாளர்’ என்ற அந்தஸ்திலிருந்து, ‘உறுப்பினர் அல்லாத பார்வையாளர்’ என்ற அந்தஸ்தை வழங்கக் கோரி ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் 2012-ல் 138 நாடுகளால் கொண்டு

வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்தன என்பதும் இங்கே நினைவுகூரப்பட வேண்டும். “மேற்குக் கரைப்பகுதி யிலிருந்து 2017-க்குள் இஸ்ரேலியத் துருப்புகளை வாபஸ் பெற வேண்டும், கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனர்களுக்கான தலை நகரத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று ஜோர்டான் கொண்டுவந்த அந்தத் தீர்மானம் ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் தோற் கடிக்கப்பட்டது. 1967-ல் நடந்த 6 நாள் போரின்போது இஸ்ரேல் கைப்பற்றிய காஸா நிலப் பரப்பிலிருந்தும் வெளியேற வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோரியது.

இஸ்ரேலுடனான சமரசப் பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் முட்டுக்கட்டை நிலைமையே நீடிப்பதால், நியாயமான தீர்வு ஏதாவது ஏற்படாதா என்ற நம்பிக்கையில் பாலஸ்தீன ஆணையத் தலைவர் முகம்மது அப்பாஸ் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்தத் தீர்மானம் சர்வதேச நாடுகளின் கவனத்தைக் கவரும் என்றும் அவற்றின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் என்றும் அவர் நம்பினார்.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீனத்தின் தீர்மானம் டிசம்பர் மாதம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்கு உட்பட்ட நாடாக பாலஸ்தீனத்தை இடம்பெறச் செய்யும் முயற்சியில் அடுத்து உடனடியாக ஈடுபட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் ஒரு பார்வையாளராகக் கலந்துகொள்ளும்படி பாலஸ்தீன ஆணையத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த அமைப்பில் சேர்ந்தால், சில இஸ்ரேலியத் தலைவர்களைப் போர்க் குற்றவாளிகளாக, ‘தி ஹேக்’ நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று பாலஸ்தீனத் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை இஸ்ரேல் மீதான பாலஸ்தீன ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தலைப் பட்டால் ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கைகளும் அதன் விசாரணை வரம்புக்குள் வரும் என்பது நிச்சயம். ஆனால், எந்தவொரு சர்வதேச அமைப்பிலும் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரிக்கையாக இருக்கின்றன. எனவேதான், பிரச்சினை தீரத் தங்களிடம் மட்டும்தான் பேச வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. பாலஸ்தீனத்தின் இந்த முயற்சிக்குப் பதிலடியாக மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பாலஸ்தீனப் பகுதி மீது விதிக்கப்போவதாகவும் பாலஸ்தீனத் தலைவர்களின் பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு பயங்கரவாதச் செயல்பாடுகளைக்கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், இஸ்ரேலின் செயல்பாடுகளை என்னவென்று சொல்வது?

உலகின் இன்னொரு பெரிய அண்ணனாக இஸ்ரேல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் உண்மை.

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *