இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டி ருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது, வன்முறை! இஸ்ரேலின் வலதுசாரி அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிரான குரலை இழந்துநிற்கிறார்கள் பாலஸ்தீனர்கள்.
பாலஸ்தீனர்கள் மீதான வன்முறையின் அடிப்படையிலேயே தனது அரசியல் வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்துக்கொண்டவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. 1996-ல் முதன்முதலாகப் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட சமயத்தில், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் செய்துகொண்ட இடைக்கால அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் இட்ஸாக் ராபினையே மிகக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.
அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்தியதற்காகப் பெருமிதம் கொள்பவர் அவர். ஒருபோதும் அமைதி ஏற்படக்கூடாது என்பதற்காக, மேற்குக் கரையில் குடியிருப்புகளை அதிகரித்தது, காஸா மீது பல முறை தாக்குதல் நடத்தியது, பாலஸ்தீனர்களின் வீடுகளைத் தகர்த்தது, சிறுவர்கள் உள்ளிட்ட பாலஸ்தீனர்களைக் கைதுசெய்தது, சமீபத்தில் பாலஸ்தீனக் குடும்பம் ஒன்றை எரித்துக் கொன்ற யூதக் குடியிருப்புவாசிகளை நீதிக்கு முன் நிறுத்தாதது என்று பல விஷயங்களைச் செய்பவர் நெதன்யாஹு.
இஸ்ரேல் எதற்காக வன்முறையைக் கடைபிடிக்கிறது? இந்த மோதலைப் பற்றி அறிந்தவர்களைப் பொறுத்தவரை இதற்கான பதில் எளிதானது. விடுதலை கோரிப் போராடிவரும் பாலஸ்தீனர்களின் போராட்டத்தை நசுக்க இஸ்ரேலிடம் ஒரு வழிமுறைதான் உண்டு. இஸ்ரேல் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒவ்வொரு பாலஸ்தீனனையும் அசுர பலம் கொண்ட ராணுவத்தால் நசுக்குவது என்பதுதான் அது. போர், வன்முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிக நிலங்களைக் கைப்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுப்பது அல்லது வெளியேறுவது என்ற நிலைக்கு பாலஸ்தீனத்தைத் தள்ளுகிறது.
தற்போது, பாலஸ்தீனர்கள் வன்முறையில் இறங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறிவருகிறது, பல காலமாக இஸ்ரேலும், மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியிருப்புவாசிகளின் வன்முறையும் இந்த நிலையை நோக்கித் தள்ளியிருப்பதை மறந்துவிட்டு! பாலஸ்தீனர்கள் அமைதி வழியில் போராடினால், நவீன காலத்து இனவெறி நாடாக இஸ்ரேலை உலகுக்குக் காட்ட முடியும் என்பதை இஸ்ரேல் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசச் சமுதாயம் நிலைமையைக் கவனித்துவருகிறது. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் பாலஸ்தீன விடுதலைக்கான ஆதரவு பெருகிவருகிறது.
பாலஸ்தீனர்களை வன்முறைப் பாதைக்கு இஸ்ரேல் இழுத்துவருவது இது முதல்முறை அல்ல. இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு சுழற்சியான தாளம் உண்டு. அதாவது, பாலஸ்தீனர்களின் ஒவ்வொரு தலைமுறையும், தனது இரும்புத் தடி கொள்கையின் பாதிப்பை உணர வேண்டும் என்று விரும்புகிறது இஸ்ரேல்.
அமைதி வழிப் போராட்டம் என்பது வெறும் மந்திரமல்ல. சுதந்திரத்தை நோக்கிய உணர்வுள்ள பாதை அது. இஸ்ரேலின் அரசியல் நடவடிக்கைகளின் சாரம் என்னவென்பதை பாலஸ்தீனர்களாகிய நாம் முழுமையாக அறிந்துவைத்திருக்க வேண்டும். இஸ்ரேல் வீரர்களே பாலஸ்தீன இளைஞர்களைப் போல் உடையணிந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மீது கல்லெறிவது; அதை நம்பி மற்ற பாலஸ்தீன இளைஞர்களும் இஸ்ரேல் வீரர்களை நோக்கிக் கல்லெறியத் தொடங்குமாறு செய்வது இதெல்லாம் இஸ்ரேலின் தந்திரங்கள். தன்னுடைய குற்றங்களை மறைப்பதற்காக, சுதந்திரம் மற்றும் சம உரிமைக்காகத் தவிக்கும் பாலஸ்தீனர்களை வன்முறையாளர்களாகவும் மனிதத் தன்மையற்றவர்களாகவும் காட்டுவது இஸ்ரேலின் பாணி. எனவே, பாலஸ்தீனர்கள் இந்த வலையில் மீண்டும் சிக்கிக்கொள்ளக் கூடாது.
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்