கட்டுரை, சட்டம், சிந்தனைக் களம், தமிழ்நாடு, போராட்டம், விமர்சனம்

ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று நமக்கு எதிராக நிற்கிறது.
நாட்டு மாடுகளின் அழிவுக்கு முதல் காரணம் பாலுக்கு போதிய விலை கிடைக்காததுதான். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.25-க்கும், குளிர்பானங்கள் ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு லிட்டர் பசும்பால் ரூ.22 முதல் ரூ.25 வரையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது. பால் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுவார்கள் என்று கவலைப்படும் நமது அரசியல்வாதிகள், பால் உற்பத்தி செய்யும் ஏழை விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது.
மாட்டுக்கு கொடுக்கக்கூடிய அடர் தீவனம் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. நாட்டு மாடு ஒன்று ஒரு வேளைக்கு அதிகபட்சம் 2 லிட்டர் வரை மட்டுமே பால் கொடுக்கும். கறவையில் இருக்கும் மாட்டுக்கு நிச்சயம் ஒரு வேளைக்கு ஒரு கிலோ அடர் தீவனம் கொடுத்தாக வேண்டும். இதுதவிர உலர் தீவனம், பசும்புல், பராமரிப்பு செலவு என இதர விஷயங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாட்டு மாடு வளர்ப்பது என்பது பொருளாதார ரீதியாக பெருத்த நஷ்டம்தான்.
ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, அரசு அறிமுகப்படுத்திய, அதிக பால் தரக்கூடிய ஜெர்ஸி மற்றும் எச்.எப். என்றழைக்கப்படும் கறுப்பு – வெள்ளை நிறத்திலான கலப்பின பசுக்களை வாங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட, அப்போது ஆரம்பமானது நாட்டு மாடுகளின் அழிவு. வேடிக்கை என்னவென்றால், பிரேஸில் உள்ளிட்ட சில நாடுகள் நமது நாட்டு மாடுகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்குக் காரணம் அவற்றிற்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான்.
நமது நாட்டு மாடுகள் வெளுத்து வாங்கும் வெயிலை மட்டுமல்ல, கன மழையையும், கடுங்குளிரையும் தாங்கக் கூடியவை. கடுமையான வறட்சியிலும் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியும். அபரிமிதமான எதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டு மாடுகளை அவ்வளவு எளிதாக எந்த நோயும் தாக்காது. ஆனால் கலப்பின மாடுகள், எல்லா காலநிலைகளிலும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். வெயில் காலத்தில் அயர்ச்சியால் இறக்கும். மழைக் காலத்தில் கால் மற்றும் வாய்ப் பகுதியில் புண் (எப்.எம்.டி.) ஏற்பட்டு இறக்க நேரிடும் அபாயம் உண்டு.
பால் மாடுகளைத் தாக்கும் மிகக் கொடிய நோயான மடிவீக்க நோய், கலப்பின மாடுகளைத் தாக்குவதற்கு 100 சதவீதம் வாய்ப்புள்ளது. கலப்பின மாடுகளுக்கு மாதந்தோறும் மருத்துவ செலவு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கலப்பின மாடுகளைவிட நம்முடைய நாட்டு மாடுகள் எல்லா வகையிலும் மேலானவைதான். ஆனால் பெரிய அளவில் அதில் பால் இல்லாததும், பாலுக்குப் போதிய விலை இல்லாததும்தான் அந்த மாடுகளின் உயிருக்கு உலை வைப்பதாக அமைந்தன.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும், எண்ணெய் செக்குகளிலும், கமலை கட்டி தண்ணீர் இறைப்பதற்கும் நமது நாட்டு காளைகள்தான் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது எல்லாமே இயந்திரமயமாகிவிட்டதால் காளைகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. தற்போது ஒரு சிலர் தங்கள் வீட்டின் பால் தேவைக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் மட்டுமே நாட்டு மாடுகளை வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டும் தடைபடுமானால் காளைகள் இறைச்சிக் கூடத்துக்கு அனுப்பப்படுவது மேலும் அதிகரிக்கும். நாட்டுக் கன்றுகளின் பிறப்பு விகிதம் குறைந்து, கடைசியில் நாட்டு மாடுகளின் இனமே அழிந்துவிடும்.
மாட்டிறைச்சியை ஒருபுறம் அனுமதித்துக்கொண்டு, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்திருப்பது போன்ற அபத்தம் வேறெதுவும் இல்லை. காளையை இறைச்சிக்காகக் கொல்லலாம், ஆனால் வீர விளையாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்கிற பீட்டாவின் வாதத்தை நீதிமன்றம் எப்படி, ஏன் ஏற்றுக்கொள்கிறது என்று புரியவில்லை.
காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளை நீக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி, கரடி, சிறுத்தை, குரங்கு, காளை போன்றவற்றிலிருந்து காளையை நீக்காத வரையில், காளை என்றால் மாடு, எருமை, கன்று, பசு என எல்லாமும் அடங்கும் என்கிற வனத் துறையின் விளக்கமும் அவ்வாறே தொடரும். ஆகவே, காளையை அப்பட்டியலில் இருந்து நீக்காமல் பிரச்னை தீராது.
ஒவ்வொரு மாநிலத்திலும் மரபு, கலாசாரம் போன்றவை வேறுபடுவதாக இருப்பதால், எந்தெந்த விலங்குகளை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பு அந்தந்த மாநில அரசிடம் இருப்பதே இந்தப் பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு. இதற்காவது அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும். தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மத்திய அரசு அதற்கு இணங்குவதைத்தவிர வேறு வழியில்லை. நிச்சயமாக பட்டியலிலிருந்து காளை அகற்றப்படும்.
தற்போதைய நிலையில் நாட்டு மாடுகளைப் பாதுகாக்க நம்மிடம் இருக்கும் கடைசி ஆயுதம் ஜல்லிக்கட்டுதான். இதை நம்மால் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து அவர்களுக்குப் புரியவைக்க முடியாததற்குக் காரணம், நமது வழக்குரைஞர்களின் திறமையின்மையா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் புரிதல் இல்லாமையா, இல்லை நமது பாரம்பரிய பசு இனம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்கிற சில சுயநல சக்திகளின் சதியா? தெரியவில்லை.

-தினமணி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *