சிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான, அனிர்பன் ராய் கூறியதாவது:
ஒரு சராசரி இந்தியருக்கு ஹீமோ டயாலிசிஸ் செய்வது மிகவும் செலவு வைக்கக்கூடியதாகும். அதற்கான கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை.
எனவே ஜெர்மனி, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து அவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் `ஹாலோ ஃபைபர்ஸ்’ எனும் இழைகளைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் இல்லை. எனவே எங்களது இந்த கண்டுபிடிப்பில், `கிளினிக்கல் கிரேட் ஃபைபர்ஸ்’ எனும் இழைகளைப் பயன்படுத்தி ஹீமோ டயாலிசிஸ் செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்தத் தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகளை உபயோகிக்கத் தேவை இல்லை. சில வெளிநாட்டு நிறுவனங்கள் அத்தகைய கருவிகளைக் கண்டுபிடித்து அவற்றை காப்புரிமை செய்து வைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் ஏகபோக தனியுரிமையை அனுபவிக்கிறார்கள்.
இதனால் சிறுநீரகம் செயலிழந்த ஒருவருக்கு வாரத்துக்கு ஒரு முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் மூன்று டயாலிசிஸர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
ஆனால் நாங்கள் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் இத்தகைய டயாலிசர்களை ரூ.200 முதல் ரூ.300க்குள் தயாரிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கண்டுபிடிப்புக்கான ஆய்வுகளுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதி உதவி அளித்துள்ளது. தற்போது இந்தக் கண்டுபிடிப்புக்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
-தி இந்து