2010-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தைராய்டு நோயால் சுமார் 4 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 10 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் கீழ்ப் பகுதியின் மையத்தில் உள்ளது. உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்பவை இந்த ஹார்மோன்கள்தான்.
உடலின் தட்பவெப்பநிலையை சீராக வைத்திருப்பது, தோலின் மென்மைத்தன்மையைப் பாதுகாப்பது, பெண்களின் மாத விடாயை ஒழுங்குபடுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தை களின் வளர்ச்சி இவை அனைத் தையும் பராமரிப்பது இந்த தைராக்ஸின்தான். தைராய்ட் சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாகவோ அல்லது அதிக மாக சுரந்து அது, உடல் நலத்தைப் பாதிக்கும்.
இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் மே 25-ம் தேதி சர்வதேச தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோய் குறித்த விழிப் புணர்வை மருத்துவர் களுக்கு ஏற்படுத்தும்விதமாக தைராய்டு நோய்த் தடுப்பு நிபுணர் சக்திவேல் சிவசுப்ரமணியன் திருச்சியில் நேற்று ஒரு கருத் தரங்கை நடத்தினார்.
கருத்தரங்குக்குப் பின்னர் அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே போதிய அளவு இல்லை. இந்த நோய்க்கான அறிகுறிகளாக உடல் சோர்வு, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதன் மூலம் அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், மறதி, உடல் எடை கூடுதல், குளிரைப் பொறுத்துக் கொள்ளமுடியாமை,தோல் கடினத்தன்மை அடைவது போன் றவற்றைக் கூறலாம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடல் பருமன் கூடும்.
தைராய்டு நோயை ஆரம்பத்தி லேயே கண்டறிந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு கட்டுப் படுத்தலாம். தைராய்ட் பாதிப்பு என்பது வாழ்க்கை முழுக்க இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாக கையாண்டால் மற்றவர்களைப்போல ஆரோக் கியத்துடன் வாழலாம்.
தமிழகத்தில் ஹார்மோன் குறித்த மருத்துவப் படிப்பு இல்லாதது பெரிய குறை. வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இந்த படிப்பு உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஹார்மோன் குறித்த படிப்பை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
– தி இந்து