இந்தியா, சட்டம், சிந்தனைக் களம், போராட்டம், விமர்சனம்

குடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாத ஜக்கியின் பேச்சை கேளுங்கள்: பிரதமர்?

இந்து முறைப்படியான திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றியுள்ளது.

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பார்க்க சொல்லி பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரமும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு இறுதி பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதில், 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நாடு முழுவதும் இதனை கொண்டு வந்தால் பலரின் குடியுரிமை பாதிக்கப்படும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பான போராட்டத்தின் போது காவல்துறையின் மூர்க்கப்பிடியில் சிக்கி கடுமையான தாக்குதலுக்கு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளாகி வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. போராட்டக்காரர்களை வன்முறையாளர்கள் என சித்தரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் தொடர்பாக பேசியுள்ளார். மாணவி ஒருவர் கேட்கும் கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் பதிலளிப்பது போன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பேசும் ஜக்கி வாசுதேவ் “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தற்போது சட்டமாகியுள்ளது. அந்த சட்டத்தை நான் முழுமையாக படிக்கவில்லை. செய்திதாள்களின் மூலமே தெரிந்து கொண்டேன்” என்கிறார். ஆனால், குடியுரிமை சட்டம் தொடர்பாக மக்களிடையே தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. எந்த ஒரு மாணவரும் செல்போன் மூலம் கூட இந்த சட்டத்தை படித்து தெரிந்து கொள்ளலாம். சட்டத்தை படித்து பார்க்க வேண்டிய கல்லூரி மாணவர்கள், படிப்பறிவற்றவர்கள் போல் வன்முறையில் ஈடுபடுவது ஆச்சரியமாக இருக்கிறது என ஜக்கி வாசுதேவ் கூறுகிறார்.

தன்னுடைய பேச்சை கேட்க ஒரு கூட்டத்தை கொண்டிருக்கும் ஒருவர், ஒரு விஷயத்தை பற்றி தான் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளாமல் போராடும் மாணவர்களை குற்றம் சுமத்துவது விமர்சனத்துள்ளாகியுள்ளது.

மேலும் பிரிவிணையின் போது ஏராளமான வேண்டத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. அப்போது பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. அருகில் இருக்கும் இரண்டு தேசங்கள் (பாகிஸ்தான், வங்கதேசம்) மதசார்புடைய தேசங்களாகின, ஆனால், நமது நாடு மதசார்பற்றது என அந்த வீடியோவில் கூறும் ஜக்கி, அந்த நாடுகளில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, ““1947ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவீதமாக இருந்தது. அது தற்போது 3.7 சதவீதமாக உள்ளது. அப்படியென்றால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது இடம் பெயர்ந்திருக்கலாம்” என்றார். இதற்கு சரி என்பது போல ஜக்கி வாசுதேவின் பேச்சும் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் தரவுகளோ வேறு மாதிரியாக உள்ளன.

பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்கு பாகிஸ்தானில் (தற்போது பாகிஸ்தான்) சிறுபான்மையினர் மக்கள் தொகை 23 சதவீதமாக இருந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 1961ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினரின் மக்கள் தொகை 2.83 சதவீதமாகவும், 1972ஆம் ஆண்டு அது 3.25 சதவீதமாகவும் உள்ளது. இது 0.42 சதவீத உயர்வாகும். அதேபோல், 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிறுபான்மையினரின் மக்கள் தொகை 3.30 சதவீதமாகவும், 1998ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 3.70 சதவீதமாகவும் சிறுபான்மையினரின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையான 210 மில்லியனில் 4 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். அதாவது பாகிஸ்தான் சிறுபான்மையினரில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.

அத்துடன், இந்தியாவில் சமூகத்தில் பாகுபாடு உள்ளது. சட்டத்தில் இல்லை. ஆனால், பாகிஸ்தானில் சட்டப்படி பாகுபடு உண்டு. சிறுபான்மையினர் மீது அங்கு பாகுபாடு காட்டப்படும். இந்து முறைப்படியன திருமணம் சட்டத்துக்கு புறம்பானது எனவும் அந்த வீடியோவில் ஜக்கி வாசுதேவ் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான அகதிகளுக்கு என்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆனால், துன்புறுத்தலுக்கு உள்ளாகும், அகதிகள் ஆகிய வார்த்தைகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை.

மேலும், காவல்துறையினருக்கு ஆதரவாக பேசியுள்ள ஜக்கி, போராட்டத்தில் ஈடுபடும் எவரேனும் கல் எறிந்தால் அவரை மட்டும் தேடிப்பிடித்து போலீசார் தாக்க முடியாது ஒட்டுமொத்த கும்பலையும்தான் தாக்குவார்கள். நல்ல வேளை அவர்கள் சுடவில்லை. இல்லையென்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறுகிறார். முன்னதாக, பொதுச் சொத்துகளுக்கு போலீசாரே சேதம் விளைவிப்பது போன்றும், வரம்பு மீறி அவர்கள் தாக்குவது போன்ற வீடியோக்களும் வெளியாகியுள்ளன. அது பற்றியெல்லாம் வாசுதேவ் பேசவில்லை.

தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பேசியுள்ள ஜக்கி வாசுதேவ், “தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான். ஒவ்வொரு குடிமகனும் பதிவு செய்வது நாட்டுக்கு அவசியம். பிறப்பு சான்றிதழ், ஆதார், ஒட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஒன்று இருந்தால் பதிவு செய்து கொள்ளலாம். சிலர் இது எதுவுமே தங்களிடம் இல்லை என்கிறனர். இவை எதுவும் இல்லை என்றால் நீங்கள் யார் (Who the hell aare you?)” எனவும் கேள்வி எழுப்புகிறார். ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. ஆதார் அட்டையை முறையான ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பாருங்கள். அவர் வரலாற்று ரீதியான தொடர்பையும், நமது சகோதரத்துவ கலாசாரத்தையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். சிலரின் தவறான பிரசாரத்தையும் அவர் சுட்டுக் காட்டியுள்ளார்” என அவரது வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த பதிவும் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமரோ, பிரதிநிதிகளோ இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். அது தான் சரியான நடைமுறையாக இருக்கும். அதனை விடுத்து, ஜக்கி வாசுதேவின் பேச்சை கேளுங்கள் என பிரதமர் மோடி கூறுவது தவறான முன்னுதாரணமாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அத்துடன், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் தவறான பிரசாரத்தை முன்வைக்கிறார்கள் என கூறும் அரசு, ஜக்கி வாசுதேவ் மட்டும் எப்படி சரியான விவரத்தை அளிக்கிறார் எனக் கூற முடியும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

Source : www.tamil.samayam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *