இந்தியா, கட்டுரை, விமர்சனம்

மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்!

modi

செப்டம்பர் மாத செய்தித்தாள்களில் வந்த தலைப்புச் செய்திகளில் பல, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரே அமைச்சருடைய பேச்சால் விளைந்தவை. அவர் ஒன்றும் மத்திய கேபினெட்டில் இடம்பெற்ற மூத்த அமைச்சர் அல்ல. பாஜகவிலும் பெரிய தூண் என்று அவரைச் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, உள்துறை என்ற முக்கியமான நான்கு பெரிய அமைச்சகங்களில் ஒன்றிலும் அவர் இடம்பெறவில்லை. மிகவும் சாதாரணமானது என்று கருதப்படும் கலாச்சாரத் துறையில்தான் அவர் ‘தனிப் பொறுப்பு’ இணை அமைச்சர். செய்தித்தாள்களில் மட்டுமல்ல; இணையதளங்களிலும் அவர் அதிகம் படிக்கப்பட்டார். மகேஷ் சர்மா பேசியதில் உள்ள நல்லது, கெட்டதுகளுக்காக நூற்றுக்கணக்கான பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கான முறை அலசப்பட்டார். தொலைக்காட்சி களின் முக்கியமான நேரங்களில் நூற்றுக்கணக்கான மணி நேரம் அவருக்காகவே ஒதுக்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதிக்கம்

பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் அவரை வலதுசாரி என்றும் பிற மதத்தவரைச் சகித்துக்கொள்ள முடியாத தன்மையர் என்றும் சாடின. இந்தியப் பெண்ணாக இருந்தால் இருட்டிய பிறகு வீட்டைவிட்டுத் தனியாக பார்ட்டிகளுக்குச் செல்ல மாட்டார். மனைவியருக்கு உற்ற இடம் சமையல்கட்டுதான். மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்திலிருந்து இந்தியக் கலாச்சாரம் விடுவிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களில் ராமாயணமும் கீதையும் பாட நூல்களாக வைக்கப்பட வேண்டும் (பைபிளோ, குரானோ அல்ல) என்றெல்லாம் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் பேசியதையெல்லாம் அவ்வப்போது விமர்சித்து வந்த ஊடகங்கள், இந்த முறை அவர் ஏன் அப்படிப் பேசுகிறார் என்று ஆராய்ந்தன. மத்திய அரசு மீது ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாடு அதிகரித்துவருவதே இதற்குக் காரணம் என்றும் வாதிட்டன.

இந்த ஆய்வு சரியல்ல என்று நான் கூற மாட்டேன். அமைச்சரின் கருத்துகள் பிற்போக்குத்தனமானவை, ஆணாதிக்க வாடை கொண்டவை என்று உலகமே சொல்லிவிடும். இப்படியெல்லாம் பேசப்படுவது குறித்து எனக்கு வியப்பே கிடையாது. கேபினெட்டில்கூட இடம்பெறாத மிகவும் இளைய அமைச்சர் இப்படி அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கிறாரே – அதுவும் பிரதம மந்திரியால் சிறிதும் கண்டிக்கப்படாமல் – என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. மகா பிரளய காலத்துக்கு முந்தைய கருத்துகளையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பேசுவது புதியதல்ல. மிகமிக சக்திவாய்ந்தவர் என்று பேசப்பட்ட, கருதப்பட்ட பிரதமர் ஒரு இளைய மந்திரியைக்கூட அடக்க முடியாதபடிக்கு வலுவற்றவராகிவிட்டார் என்பதுதான் இப்போது புதியது.

2014 மே மாதம் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, நினைத்ததைப் பேசவும் செயல்படுத்தவும் முடிந்த சக்திவாய்ந்த பிரதமராக அவர் போற்றப்பட்டார்; அதுவும் அவருக்கு முன்பு அப்பதவியை வகித்த மன்மோகன் சிங்குடன் ஒப்பிடப்பட்டு பாராட்டப்பட்டார். தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், பிரதமர் பதவி வகித்தாலும் பேச்சிலும் நடத்தையிலும் அடக்கமானவராகவே இருந்துவிட்டார் மன்மோகன் சிங். பெரும்பாலான விஷயங்களில் (எல்லாவற்றிலும் என்று சிலர் சொல்லக்கூடும்) கட்சித் தலைவரான சோனியா காந்தியின் கருத்தை அறிந்த பிறகே செயல்பட்டார்; மன்மோகனுக்கு என்று அரசியல் பின்புலம் ஏதும் இல்லாமல் இருந்தது. நரேந்திர மோடியோ பேசும்போதும் செயல்படும்போதும் உறுதிபடச் செய்தார். குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது அடுத்தடுத்து மூன்று பொதுத் தேர்தல்களில் கட்சிக்கு அபார வெற்றியை ஈட்டித்தந்தார். குஜராத்தில் அவரே கட்சியின் குரலாகவும் ஆட்சியின் குரலாகவும் தனித்து ஒலித்தார்.

மோடி எனும் குஜராத் சிங்கம்

2013-14 தேர்தல் பிரச்சாரம் இவற்றையெல்லாம் தெளிவுபட எடுத்துக் காட்டியது. நரேந்திர மோடி முதலில் கட்சிக்குள் தனக்கிருந்த எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்தார். பிறகு, பிற கட்சிகளையும் தோற்கடித்தார். இவையெல்லாம் அவருடைய ஆளுமையின் வலிமைக்குச் சான்றாகக் கொள்ளப்பட்டன. 1971-ல் இந்திரா காந்தி இருந்ததைப் போல, கட்சியிலும் ஆட்சியிலும் ஒருசேர செல்வாக்கு செலுத்திய தலைவர் நரேந்திர மோடிக்கு முன்னால் இன்னொருவர் இல்லை என்று அவரை எதிர்த்தவர்களும் ஆதரித்தவர்களும் ஒப்புக்கொண்டனர். மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் தெரியவந்ததும் அனைவருமே நம்பினர். அவருடைய ஆட்சி மன்மோகன் சிங்கின் ஆட்சியைவிட வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமென்று. தூங்கிவழியும் அதிகார வர்க்கத்தின் பிடறியைப் பிடித்து இந்த குஜராத் சிங்கம் உலுக்கிவிடும் என்று ஆதரவாளர்கள் நம்பினர். பத்திரிகைகளையும் எதிர்க் கட்சிகளையும் ஒடுக்குவதில் இந்திரா காந்தியைப் போலவே இவரும் சர்வாதிகார மனப்பான்மையோடு நடப்பார் என்று விமர்சகர்கள் கவலைப்பட்டனர்.

வதந்திகளின் நகரம்

நரேந்திர மோடி பிரதமரான முதல் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அவரைத் தனியாகச் சந்திக்கவே பிற அமைச்சர்கள் அச்சப்பட்டனர் என்றே டெல்லியில் பேசிக்கொண்டனர். டெல்லி நகரம் இருக்கிறதே வதந்திகளின் உலாவுக்குப் பெயர்பெற்றது. கற்பனா சக்தியில் கரைகண்ட நிபுணர்கள் பலர் தங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் மோடியின் நிர்வாகம் குறித்துக் கதைகளைப் பரப்பத் தொடங்கினர். தன்னுடைய கட்சிக் காரர்களையும் அமைச்சரவை சகாக்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர், மத்திய அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு விசுவாசமானவர்களே என்று பேசப்பட்டதை எல்லோருமே நம்பினார்கள்.

2015 மே மாதம், அனுபவம் வாய்ந்த நிர்வாக நிபுணர் ஒருவரை நான் சந்தித்தேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காங்கிரஸ், மூன்றாவது அணி ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் அவர். “மன்மோகன் சிங் ஆட்சியில் பிரதமருக்கு அதிகாரம் இல்லை, அமைச்சர்கள் தங்கள் விருப்பம்போலச் செயல்பட்டனர். மோடி ஆட்சியில் அதிகாரம் எல்லாம் பிரதமர் ஒருவரிடமே குவிந்துவிடப்போகிறது; அமைச்சர்களுக்குச் செயல்பாட்டுச் சுதந்திரமோ விருப்ப அதிகாரமோ இருக்கப்போவதில்லை” என்று கவலைப்பட்டார். 16 மாதங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தேன். “நரேந்திர மோடி அரசும் மன்மோகன் அரசைப் போலத்தான் திக்கு திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் தங்களுடைய விருப்பம்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் வேலையே செய்வதில்லை” என்றார்.

மன்மோகன் சிங் ஆட்சியில் சர்ச்சைக்கிடமாகப் பேசியவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரிந்தவர்கள். வெளிநாடுகளிலோ டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியிலோ படித்தவர்கள். இப்போதைய ஆட்சியில் அப்படிப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு மிகவும் நெருக்கமான ராஜ்நாத் சிங், மகேஷ் சர்மா போன்றவர்கள். அப்போதைக்கும் இப்போதைக் கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பிரதம மந்திரியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் பேசினாலும்கூட நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்ற துணிச்சல் இந்த இளைய அமைச்சர்களுக்கு இருக்கிறது.

சகாக்களின் எதிர்ப்பு

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்கிற இச்சமயத்தில், முந்தைய ஆட்சிக்கும் இப்போதைய ஆட்சிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிரதமராகப் பதவியேற்ற புதிதில் மன்மோகன் சிங்கும் துணிச்சலாகப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அரசு நிர்வாகத்தை நவீனப்படுத்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை நியமித்தார். கல்வியை நவீனப்படுத்த அறிவூட்டு ஆணையத்தை ஏற்படுத்தினார். அவருடைய அமைச்சரவை சகாக்களே அவற்றைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியதால் அந்த முயற்சிகளிலிருந்து பின்வாங்கி, தன்னுடைய நடவடிக்கைகள் பலமிழந்து இற்றுப்போக அனுமதித்தார்.

டெல்லியில் டெங்குவின் வேகம்

நரேந்திர மோடியும் ‘ஸ்வச் பாரத் அபியான்’, ‘பேட்டி பச்சாவ் – பேட்டி படாவ்’ அந்தோலன் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால், அதன் பிறகு அத்திட்டங்களுக்கு அரசு உத்வேகம் அளிக்கவில்லை. தலைநகர் டெல்லியிலேயே டெங்கு பரவும் வேகத்தைப் பார்க்கும்போது, இத்துறைகளில் இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன.

இன்னொரு விஷயத்திலும் நரேந்திர மோடிக்கும் மன்மோகன் சிங்குக்கும் ஒற்றுமை இருக்கிறது; அது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போவது. இந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பியிருக்கிறார் நரேந்திர மோடி. ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் பிற நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், மன்மோகன், நரேந்திர மோடியின் பயணங்களுக்குப் பின்னால் அதிகம் இருப்பது சொந்த விருப்பம்தான். மன்மோகன் சிங்கைப் பொறுத்தவரையில் அவர் உள்நாட்டில் தங்கியிருந்து கவனிக்க வேண்டிய நிர்வாக வேலைகள் அதிகம் இல்லை! வெளிநாடுகளுக்குப் போனாலாவது உலகத் தலைவர்கள் அவரைப் புகழ்ந்து பேசுகிறார்கள், காது குளிரச் சிறிது நேரம் கேட்டுவிட்டு வரலாம். ஜார்ஜ் டபிள்யு புஷ் அவரை ‘நண்பரே’என்று பாசமுடன் அழைக்கிறார்; ‘முனிவரைப் போன்ற ராஜதந்திரி’என்று பராக் ஒபாமா புகழ்கிறார்.

மோடிக்கும் அதேதான் நிலைமை. உள்நாட்டில் எவ்வளவு முயன்றாலும் நிர்வாகத்தை ஓரளவுக்கு மேல் நகர்த்த முடியவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து ‘மோடி மோடி’ என்று உற்சாகக் குரல் எழுப்பி வாழ்த்திக்கொண்டே இருக்கிறார் கள். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால், மோடியை வாழ்த்தும் இந்திய வம்சாவளியினரைப் போல வேறெந்தத் தலைவர்களுக்கும் இப்படிப்பட்ட வாழ்த்துகளும் வந்தனோபசாரங்களும் நடப்பதில்லை.

ஒரு விஷயத்தில் மட்டும் மன்மோகனுக்கும் மோடிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது பொது மேடைகளில் மக்களை ஈர்க்கும் வகையில் பேசும் கலை. மன்மோகன் நல்ல பேச்சாளர் அல்ல; மோடி அதில் கெட்டிக்காரர். வெளிநாட்டுத் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசும்போது தன்னுடைய அறிவாழத்தை வெளிப்படுத்திக் கவர்ந்துவிடுவார் மன்மோகன். மோடியோ மேடையில் நாடக பாணியில் உடல் மொழியோடு, குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசிக் கவர்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் மன்மோகனின் பங்கு அதிகம் இருந்ததில்லை. பாஜகவுக்கோ மோடிதான் முக்கியப் பேச்சாளர்.

வெளிநாடுகளில் செலவழித்த நேரம், உள்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நேரம் ஆகியவற்றைக் கூட்டி, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்து இதுவரையிலான மொத்த நேரத்தைக் கழித்தால், நாட்டின் நிர்வாகத்தில் மன்மோகனை விடக் குறைவான நேரத்தையே மோடியும் செலவிட்டிருக்கிறார் என்ற உண்மை புரியும். டெல்லியில் தங்கியிருப்பதே அபூர்வம் என்னும்போது தனது அமைச்சரவையைச் சேர்ந்த இளைய அமைச்சர் என்னவெல்லாம் பேசுகிறார், பேட்டியளிக்கிறார் என்று எவ்வாறு ஒரு பிரதமரால் கண்காணிக்க முடியும்? மோடியின் அரசு, திக்கு திசை தெரியாமல் தடுமாறுவதில் வியப்பேதும் இல்லை; மன்மோகன் சிங் பேசியது குறைவு, செயல்பட முடிந்தது அதைவிடக் குறைவு. நரேந்திர மோடியிடம் பேச்சு அதிகம், செயல்பாடு?

ராமச்சந்திர குஹா

தமிழில்: சாரி

-தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *