அரசியல், இந்தியா, சிந்தனைக் களம், விமர்சனம்

ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. பதவி: நேர்மையற்ற செயல்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதும், அதை ஏற்றுக்கொண்டதும் அவர் வகித்த பதவிக்குப் பெருமை சேர்ப்பதல்ல; மாறாக, கண்ணியத்தைக் குலைப்பதாகும். மிகச் சிறந்த சட்ட வல்லுநருக்கான கௌரவமாக இது தோன்றாது; தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தபோது ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்கு வழங்கப்பட்ட பரிசாகவே இந்த நியமனம் பார்க்கப்படும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற நான்கு மாதங்களுக்கெல்லாம் இந்த நியமனம் நடந்துள்ளது. ஆளும் கூட்டணிக்குச் சாதகமாக அளித்த தீர்ப்புகளுக்காகவும், சில வழக்குகளைத் தாமதப்படுத்தியதற்காகவும் இந்த நியமனம் என்று சிலருக்குத் தோன்றினால் அதைத் தவறு என்று எப்படிக் கூற முடியும்?

நீதித் துறைக்கும் சட்டத் துறைக்கும் இடையில் மோதல் இல்லாமல் சுமுகமாக ஒருங்கிணைந்து செயல்படவே இந்த நியமனம் என்று சிலர் கூறுவதையும் ஏற்பதற்கில்லை. ஓய்வுபெற்ற பிறகு நீதித் துறைக்கு அவர் பிரதிநிதியும் இல்லை. அவரை அந்தப் பணிக்காக நீதித் துறைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மாநிலங்களவையில் விவாதம் நடக்கும்போது அவருடைய சட்ட அறிவும், நீதிபதியாகப் பணியாற்றிய அவருடைய அனுபவங்களும் வெளிப்படும் என்பதை மட்டுமே ஏற்கலாம்.

அயோத்தி வழக்கிலும், ரஃபேல் விமான பேரம் தொடர்பான வழக்கிலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருந்தார். எனவே, தார்மீக அடிப்படையில் இந்த நியமனத்தை கோகோயே ஏற்க மறுத்திருக்க வேண்டும். தேர்தல் நன்கொடைப் பத்திரம் தொடர்பான வழக்கையும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டத்தை நீக்கியது தொடர்பான வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தாமதப்படுத்திய அவருடைய நிர்வாக முடிவுகளும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் அமைந்தன. நியமன உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டிருப்பதால் அவருடைய முந்தைய செயல்கள் அனைத்துக்கும் ஒரு சாயம் ஏறுவதைத் தடுக்க முடியாது. ‘ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநிலங்களவைக்கு இதற்கு முன்னாலும் நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் ஆளுநர்களாகக்கூட பதவி வகித்துள்ளனர்’ என்று ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. அது இந்த நியமனத்தை நியாயப்படுத்திவிடாது. ‘இது முறையற்ற செயல்தான்’ என்பதை அவர்களே மறைமுகமாக ஒப்புக்கொள்வதைப் போல் ஆகிறது.

1984-ல் டெல்லியிலும் பிற நகரங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாது என்று அளித்த தீர்ப்புக்குப் பரிசாகத்தான் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இன்னும் உயிரோடு உள்ளது. பிஹாரில் நிதி முறைகேட்டில் காங்கிரஸ் முதலமைச்சர் சம்பந்தப்படவில்லை என்று அளித்த தீர்ப்புக்காக நீதிபதி பஹருல் இஸ்லாம் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார், அதே பதவியை 1972-ல் ராஜிநாமா செய்துவிட்டு உயர் நீதிமன்ற நீதிபதியானார்; 1983-ல் அவரே உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை விட்டு விலகி தேர்தலிலும் போட்டியிட்டார் என்பதும் அப்படித்தான். இந்த முன்னுதாரணங்கள் நல்லவை, உடனே பின்பற்றத்தக்கவை என்று ஆளுங்கட்சியும் அதன் தலைவர்களும் கருதுகின்றனரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *