ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் வரும்போது தானாகவே சிவப்பு சிக்னல் பச்சை சிக்னலாக மாறும் தொழில்நுட்பம் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூர் மாநகர போக்குவரத்துத் துறை காவல் கூடுதல் ஆணையர் எம்.ஏ.சலிம் கூறியதாவது:
சமீபகாலமாக பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதி கரித்து வருகிறது. தினமும் சுமார் 2 கோடி எண்ணிக்கையிலான வாகனங்கள் பெங்களூருவின் சாலைகளில் பயணிக்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
புதிய சாலைகளையும் புதிய மேம்பாலங்களையும் கட்டினால்கூட போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி,வேகமாக செல்ல முடிவதில்லை. இதேபோல அவசரமாக செல்ல வேண்டிய தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு போக முடியவில்லை.
இதனை தவிர்க்கும் வகையில் பெங்களூரு மாநகர போக்கு வரத்து துறை பல்வேறு திட்டங் களை தீட்டி அமல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் சிக்னலை மாற்றும் வகையில் தொலைபேசி எண் சேவையை அறிமுகப்படுத் தினோம்.அதன்படி சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக சிக்னல் மாறி அவர்கள் செல்ல முடியும்.
ஆட்டோமேட்டிக் சென்சார் கருவிகள்
அதனைக் காட்டிலும் சற்று மேம்பட்ட வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படக்கூடிய போக்குவரத்து சிக்னல் முறையை பெங்களூருவில் அமல்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சிக்னலில் காத்திருக்காமல் அவை வந்த உடனே சிவப்பு விளக்கு பச்சை விளக்காக மாறும். இதன் மூலம் செல்ல வேண்டிய இடத்துக்கு வேகமாக செல்ல முடியும்.
பெங்களூரின் முக்கியமான சாலைகளில் உள்ள 353 சிக்னல்களில் ரூ.75 கோடி செலவில் ஆட்டோமேட்டிக் சென்சார் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த கருவிகள் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களின் மேல் சுழலும் விளக்கை அடையாளம் கண்டு அதற்கான பாதையில் போக்குவரத்தை திறக்கும் வகையில் பச்சை சிக்னலுக்கு மாறும்.
இந்த கருவிகள் விஐபிகளின் வாகனங்கள் வந்தாலும் வழிவிடாது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு மட்டுமே வழிவிடும். இத்தகைய நடைமுறைகள் வளர்ந்த நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் இந்த சிக்னல் சென்சார் திட்டம் கொண்டுவரப்படுகிறது.
இதற்கான தயாரிப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.