இந்தியாவிலேயே அதிகம் புயலால் பாதிக்கப்படும் ஒரே மாநிலம் ஒடிசா. கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால் மாநிலத்தின் 5 மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. 9 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்தனர். ஒரு கோடியே 25 லட்சத்து 71 ஆயிரம் பேர் பாதிப்படைந்தனர்.அன்று முதல் புயல் பாதிப்புகளை சவாலாக ஏற்றுக் கொண்டு அரசும் அதிகாரிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மெச்சத்தக்கவை. கடந்த 2013ம் ஆண்டு ‘பைலின்’ புயல் 260 கிலோ மீட்டர் வேகத்தில் ஒடிசாவை புரட்டிப்போட அப்போது மொத்தம் 23 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஒடிசா அரசு மேற்கொண்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்பு குறைந்ததாக அப்போது ஐநா சபை பாராட்டியது. கடந்த ஆண்டு அக்டோபர் 11ல் டிட்லி புயல் ஒடிசாவை தாக்கியபோது 8 பேரே உயிரிழந்தனர்.கடந்த 3ம் தேதி மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி மற்றும் கனமழையுடன் கரை கடந்தது பானி புயல். புயலின் போக்கை சரியாக கணித்த இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த முன்னெச்சரிக்கையால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் முழுமையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நடவடிக்கைகளால் புயலின் கோர தாண்டவத்திற்கு 8 பேர் மட்டுமே பலியாகினர்.
இதுகுறித்து ஐநாவுக்கான பேரிடர் மீட்பு குழு கூறுகையில், மிக அதீத புயலை அதிக உயிரிழப்பு இல்லாமல் இந்தியா எதிர்கொண்டுள்ளது. மிக துல்லியமாக முன்கூட்டியே இந்திய வானிலை மையம் புயல் நகர்வுகளை கண்காணித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நேரத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ள பாதிப்பு நினைவிற்கு வருகிறது.கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரும் வெள்ளக்காடானது. நவம்பர் இரண்டாவது வாரம் பெய்த பெருமழையின் போதே அரசு சுதாரித்துக் கொள்ளாததால் வந்த விளைவு, 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிர்க்கதியாயினர். வெள்ளத்துக்கு மட்டும் சென்னையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 260-ஐ தாண்டியது.ஆண்டுகள் 3 உருண்டோடியும் அந்த பாதிப்புகளிலிருந்து அரசு இதுவரை பாடம் படித்துக் கொண்டதாக தெரியவில்ைல. நல்லவேளையாக தமிழகத்தை அச்சுறுத்திய பானி புயல் திசைமாறி ஒடிசாவிற்கு சென்றது. கஜா பாதிப்பிலிருந்தே தமிழகம் மீளாத நிலையில் பானி தாக்கியிருந்தால் நிச்சயம் மாநிலமும் மக்களின் மனமும் நொறுங்கித்தான் போயிருக்கும். ஒடிசாவை பார்த்தாவது அதிகாரிகள் பாடம் படிக்க வேண்டிய நேரம் இது.