கல்வி, தமிழ்நாடு, போராட்டம், விமர்சனம்

நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் 7 நாட்களாக தொடரும் போராட்டம்

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நடத்தும் போராட்டம் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிக்கரணையில் உள்ள ஆசான் நினைவு கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள், கொடுங்கையூரில் உள்ள முத்துக்குமாரசாமி கல்லூரி மாணவர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை பெல் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலாப்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் தமுக்கம் மைதானம் அருகே மறியலில் ஈடுபட்ட 80 மாணவர்கள் கைதாகினர். காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்பு மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கையில் அரசு கல்லூரி மாணவர்கள் 1000 பேர் ஊர்வலமாக சென்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், பழனியில் பழனியாண்டவர் கல்லூரியிலும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 18 பேர் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம் அரூரில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். பெரம்பலூர், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் போலீஸார் விடுமுறை எடுக்க உயர் அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *