இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 6 சதவீதத்துக்குக் கீழாக குறையும் என்று தற்போது தெரியவந்துள்ளது. 2012-2017-ம் ஆண்டு திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் நிலவும் பொருளாதார தேக்க நிலை மற்றும் வெளி நாடுகளில் நிலவும் தேக்க நிலை காரணமாக வளர்ச்சி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திட்டக் கமிஷனின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி 8 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டுவது மிகவும் சிரமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் சராசரி வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் கீழாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டக் கமிஷனின் இடைக்கால மதிப்பீட்டு அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
உற்பத்தித் துறை வளர்ச்சி மந்தமாக இருப்பதால் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. மேலும் ஏற்றுமதி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாகும். சர்வதேச காரணிகளால் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
2013-14-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் தொழில்துறை உற்பத்தி 0.1 சதவீதம் சரிந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீத அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2015-16-ம் நிதி ஆண்டில் 12 சதவீத அளவுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது சாத்தியமல்ல என்று இடைக்கால அறிக்கையில் திட்டக் கமிஷன் குறிப்பிட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்கும் அரசு பிற துறைகளின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்று அக்டோபர் மாதவாக்கில் மறு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.