மும்பை: மஹாராஷ்டிரா மாநில அரசு, சத்ரபதி சிவாஜி சிலையை, 3,600 கோடி ரூபாய் மதிப்பில் நிர்மாணித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் மும்பையில், கடற்கரை அருகே, சத்ரபதி சிவாஜி சிலையை நிர்மாணிப்பதற்கான பணிகளை, 3,600 கோடி ரூபாய் மதிப்பில், பா.ஜ., அரசு துவக்கி உள்ளது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை நிறைவேற்ற, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. பொதுமக்களிடமும் கருத்து கேட்காமல், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதிக பொருட்செலவில், இத்திட்டத்தை நிறைவேற்றுவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடற்கரை பகுதியில் பிரம்மாண்ட சிலையை அமைப்பது, மீன்பிடி பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, மீனவர்கள் புகார் கூறுகின்றனர். இதற்கிடையே, சிலை அமைக்கும் பகுதியில், இத்திட்டத்துக்காக, கடலுக்கடியில் மின் கேபிள்கள் பதிக்கும் பணி, போதிய முன் அனுபவம் இல்லாததால் நிறைவேற்றுவது கடினம் என, மும்பை மாநகராட்சி கழகமும், மின் வாரியமும் புலம்பத் துவங்கி உள்ளன. மும்பையில் சிவாஜி சிலை உருவாக்கும் பணத்தில், அம்மாநிலத்தின் விவசாயத் தேவைகளுக்கு, இரண்டாண்டு களுக்கு செலவிட முடியும் எனக் கூறப்படுகிறது. ‘மின் திட்டங்கள், சாலைகள் அமைக்கும் திட்டங்கள் போன்றவற்றுக்கு, அப்பணத்தை செலவிட்டிருக்க முடியும்’ என, பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.