ஆளில்லா விமானம் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பிட்ஸா விநியோகம் செய்வதை வெற்றிகரமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது ரஷ்யாவைச் சேர்ந்த டூடு பிட்ஸா நிறுவனம்.
ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல நிறுவனங்கள் சோதனை முறையில் ஆளில்லா விமானம் மூலம் பிட்ஸா விநியோகம் செய்துள்ள போதும், முறைப்படி அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
ரஷ்யாவின் வடக்குப் பகுதியிலுள்ள சிக்டிவ்கர் நகரத் தில் இயங்கிவரும் டூடு நிறுவனம், ஆளில்லா விமானம் மூலம் பிட்ஸா விநியோகிப்பதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது வெறும் விளம்பர யுக்தி அல்ல, தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் இலியா பரபனோவ் கூறுகையில், “ஏற்கெனவே 6 பிட்ஸாக்களை 1.30 மணி நேரத்துக்குள் ஆளில்லா விமானம் மூலம் விநியோகித்துள்ளோம்.
வானிலிருந்து பிட்ஸா விநியோகம் செய்யப்படுவதை மக்கள் பார்க்கும் போது, அதை ஒரு மாயவித்தை போல ரசிக்கின்றனர். இதுவரை பிட்ஸாவை வேண்டாம் எனக் கூறியவர்கள் கூட, தற்போது வாங்க நினைக்கின்றனர்.
ரஷ்யாவின் 18 நகரங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இத் திட்டத்தில் உள்ள ஒரே தடங்கல் என்னவெனில், ஒவ்வொரு ஆளில்லா விமானம் பறக்கும் பாதையும் கவனமாகத் திட்ட மிடப்பட வேண்டும். உரிய அமைப் பிடம் முன் அனுமதியும் பெற வேண்டும்.
பிரிட்டனில் உள்ள டோமினோஸ், இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனம் ஆகியவை ஆளில்லா விமானம் மூலம் பிட்ஸா விநியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், தொடர்ந்து அவை அதனைச் செயல்படுத்தவில்லை” என்றார்.
அமேஸான் நிறுவனம் கடந்த ஆண்டு இத்திட்டத்தை அறிவித்திருந்தது. மேலும் சில நிறுவனங்கள் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தங்களின் பொருள்களை விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.