அரசியல், தமிழ்நாடு, விமர்சனம்

தமிழ்நாடு ஆளுநர் – சர்ச்சை நாயகன்

தமிழ்நாடு ஆளுநர், மாநில அரசுக்கு எதிரான கொள்கையை தீவிரப்படுத்துவது, மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, தற்போது புதுவரவாக உண்மைக்கு மாறான புகார் கொடுப்பது போன்ற சர்ச்சை நாயகனாக திகழ்வதாக புகார்கள் குவிகிறது. சட்டப் பேரவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மறுத்து வருகிறார். தேசிய கல்வி கொள்கையை மாநில அரசுகள் எதிர்த்து வரும் நிலையில் அதனை திணிக்கும் வகையில் செயல்படுகிறார். நூற்றாண்டு கண்டு வாழ்ந்து வரும் தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அரசின் முடிவை ஏற்க மறுக்கிறார்.

பட்டியலினத்தவர்கள் உள்பட மாற்று சாதியினருக்கு பூணூல் அணிவித்த விவகாரம் மற்றும் சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் பேசியது சன்மார்க்க அன்பர்களை முகம் சுளிக்க வைத்தது. நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களையும், தியாகிகளையும் தேடித்தேடி பெருமைப்படுத்தும் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும், வெறுப்பையும் பரப்பும் பிரசாரகராக செயல்படுகிறார்.

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை, திராவிட கொள்கை என்று தொடர்ச்சியாக திமுக அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருவதை ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளார். இதனை பாஜவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றன. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்த விவகாரத்தில் அம்மாநில ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது அரசியல் களத்துக்குள் ஆளுநர்கள் நுழையக் கூடாது, என தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் சூடு வைத்தார்.

ஆனாலும் பாஜ ஆளும் மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அந்தந்த மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார்கள் தொடர்கிறது. ஆளுங்கட்சியின் அதிகாரத்தில் நுழைதல் மூலம் மாநிலத்தில் குழப்பத்தை விளைவித்தல் வேலைகளில் தீவிரமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை மாநில அரசுகள் கூறுகின்றன. ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் குண்டு வீசப்பட்டது எனவும், குண்டு வெடித்ததாகவும், குற்றவாளி அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டார். ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என ஆளுநர் மாளிகை சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதுபோன்ற பொய்யான வதந்திகள் மக்கள் மன்றத்தில் வலு சேர்க்காது. மாறாக மக்களிடம் கடும் கோபத்தை தான் ஏற்படுத்தும். இந்நிலையில் தான் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொள்வது, தயவுசெய்து இங்கிருக்கும் ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள். இந்த மக்களவை தேர்தல் வரைக்குமாவது கொஞ்சம் இருக்கட்டும். எங்களுக்கு அதில் பல சவுகரியங்கள் உள்ளது, என்றார். அந்தளவுக்கு ஆளுநர் சர்ச்சை நடவடிக்கை தொடர்வதன் வெளிப்பாடாகும். ஆளுநர் என்பவர், மாநில அரசோடு இணைந்து மக்கள் நல திட்டங்களை தீட்டி மக்களுக்காக பணியாற்ற வேண்டுமே தவிர அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்தி சர்ச்சை நாயகனாக இருக்க வேண்டாமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *