சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் 3,872 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இப்போது, 200 மில்லியன் கனஅடி நீர்கூட இல்லை. சென்னை மக்களின் தாகத்தை போக்க நாள் ஒன்றுக்கு 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், 400 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்படும் குடிநீர், கடல்நீரை குடிநீராக்கி விநியோகிக்கும் திட்டம், விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் என எல்லா நீராதாரங்களும் முடங்கிவிட்டன.
தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுெமாத்த இந்தியாவையும் தண்ணீர் பிரச்னை வாட்டி எடுக்கிறது. இந்தியா முழுவதும் 255 மாவட்டங்கள், 1,597 மண்டலங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில், மாநிலஅளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்கள் 2வது, 3வது இடத்தை பிடித்துள்ளன.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக, தலைநகர் ெசன்னை தவிக்கிறது. இந்தியாவில் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நாடு முழுவதும் உள்ள 4,378 நகராட்சிகளில் 756 நகராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேற்கண்ட தகவல் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தண்ணீர் ேமலாண்மையை முறையாக மேற்கொள்ளாத காரணத்தினால்தான் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதேநிலை நீடித்தால் இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டுக்குள் 30 சதவீத மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என மத்திய நிதி ஆயோக் அடுத்த அதிரடியை வெளியிட்டுள்ளது.
தண்ணீர்… தண்ணீர்… என இயற்கையை எதிர்நோக்கி காத்திருந்தால் மட்டும் போதாது. தண்ணீர் சேமிப்பில் ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் அவசியம். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், நீராதாரங்களை புதுப்பித்தல், தூர்வாருதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்தல், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதை, சட்டமாக கொண்டுவந்து, தண்ணீர் மேலாண்மையை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இதில் அலட்சியம் காட்டினால், அடுத்த தலைமுறை கோர வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பல துறைகளில் பின்தங்கியுள்ள தமிழகம், வறட்சியில் மட்டும் முதலிடம் பெற்றுள்ளது உண்மையில் வேதனையானது.