அரசியல், இந்தியா, சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம், வீடியோ

காஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ!


*வரலாறு உங்களை மன்னிக்காது*

பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க. உறுப்பினர் அவரைத் தாக்கினர். நாசீர் அகமதுவை மாநிலங்கள் அவை காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர்.

இந்தப் பிரச்னையில் அவர் இந்திய அரசியல் சட்டத்தை இங்கே தீ வைத்துக் கொளுத்தியிருந்தாலும் முதல் ஆளாக வரவேற்றிருப்பேன். நான் இந்திய அரசியல் சட்டத்தின் இந்தி மொழிப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தியவன்.

இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்கள், மறுபக்கம் பாகிஸ்தனில் அல்கொய்தா அமைப்பினர், ஒரு பக்கம் நம் மீது வெறுப்பு கொண்டிருக்கும் செஞ்சீனா தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இனிமேல் காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையாக இருக்காது, அனைத்துலக நாடுகளின் பிரச்னையாகிவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு திறமையான குள்ளநரி. கொசாவோ பிரச்னைபோல் காஷ்மீர் பிரச்சினை ஆகும். சூடான் பிரச்சினைபோல் காஷ்மீர் பிரச்னை ஆகும். கிழக்கு தைமூர் பிரச்னை போல் பிரச்னை ஆகும். ஐ.நா.மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும் தலையிடும்.

இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்களை வரலாறு மன்னிக்காது.காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.

இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *