மனித வாழ்வில் தொழில்நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அதனால் சாதகமான விளைவுகள் ஏற்படும் வரை பிரச்னையில்லை. பாதகமான பாதையில் பயணித்தால், அது மனித வாழ்வையே சீர்குலைத்து விடும். அந்த வகையில் தொழில்நுட்ப வளர்ச்சியா அல்லது மனித வாழ்வுக்கே மிரட்சியா என்று எண்ணும் அளவுக்கு சமூக வலைத்தளங்கள் மாறி வருகின்றன. இதனால் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுவதோடு, எதை செய்தாலும் அதை வீடியோவாக பதிவிட்டு வைரலாக்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டவர்களால், சட்டம், ஒழுங்கு கூட பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுவது வேதனைக்குரிய விஷயம். உலக அளவில் அதிகாரப்பூர்வமாக சுமார் 15 கோடி யூடியூப் சேனல்கள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 8 கோடி சேனல்கள் உள்ளன. ஒரு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆன்ட்ராய்ட் போன் இருந்தால் போதும். யாரும் யூடியூபர் ஆகி விடலாம். ‘ஹாய் ப்ரோ… இந்த ஓட்டலில் நண்டு ஆம்லெட் சாப்பிட்டிருக்கீங்களா…? வேற லெவல் டேஸ்ட்…’ என்று ஒரு யூடியூபர் பதிவிடுகிறார்.
உடனே, அது வைரலாகி விடுகிறது. பார்வையாளர்களை அதிகரிக்கிறது. பார்வைகளுக்கு ஏற்ற வகையில் பணம் வந்து சேர்கிறது. தன்னை மட்டுமல்ல… அந்த ஓட்டலையும் பிரபலப்படுத்தி விடுகிறார் அந்த யூடியூபர். இதற்கான வருவாய் தனிக்கதை. இதேபோல ஒருவருக்கு தெரியாமல் வீடியோ எடுப்பது, காதலன் – காதலி, கணவர் – மனைவி அந்தரங்க விஷயங்களை பதிவிடுவது, பச்சை மிளகாய்களை அள்ளி உண்பது, டீசல் புரோட்டா, சாக்லேட் பிரியாணி என கேட்டாலே மிரண்டு ஓடும் அளவுக்கு, வைரலாக்குவதையே வைராக்கியமாக கொண்ட யூடியூபர்களால் வலைத்தளங்களே வாய் விட்டு கதறுகின்றன. அந்த வகையில் உணவு ெதாடர்பான விமர்சனங்களை போட்டு பிரபலமானவர் இர்பான். இவர் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை பதிவிட்டு, அவர் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பான ஒவ்வொரு நிகழ்வையும் வீடியோ எடுப்பது, அதனை வலைத்தளங்களில் வைரலாக்குவது ஒரு ட்ரெண்ட் ஆக உள்ளது. இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது இந்திய சட்டத்தின்படி சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல், வீடியோவாக வெளியிட்டது மாபெரும் தவறு. நாளை இதே தவறை மீண்டுமொருவர் செய்வார். வலைத்தளங்களில் பதிவிடுவார். இது தவறான முன்னுதாரணமாகி விடும். அனைவருக்கும் சமூக பொறுப்பு உள்ளதை உணர வேண்டும்.
சமீபகாலமாக, யூடியூப் வீடியோக்களை பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்தல், சாராயம் காய்ச்சுதல், வங்கியில் திருட முயல்தல், காதலியை கண்டம்துண்டமாக வெட்டி கொன்றது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதுபோன்ற வீடியோக்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறது? வீடியோக்களை முறைப்படுத்துவது யார்? பல கோடி வீடியோக்களை பார்வையிடுவதில் பிரச்னை இருக்கலாம். அதே நேரம் ெதாழில்நுட்பங்களை பயன்படுத்தி இதுபோன்ற சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வீடியோக்களை தடுத்து நிறுத்தலாமே? இனியாவது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும், அவதூறு பரப்பும் வீடியோக்களை பதிவிடுபவர்கள் மீது கடும் தண்டனை விதித்து, நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த முடியும்.