அரசியல், உலகம், தேர்தல், பயங்கரவாதம், விமர்சனம்

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் காட்டுவது எதை?

benjamin_2350360f

சமீபத்தில் நடந்துமுடிந்த இஸ்ரேல் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து ஆச்சரியப் படுபவர்கள், இஸ்ரேலின் அரசியல் போக்குகுறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களாகத்தான் இருப்பார் கள். அதேசமயம், இந்தத் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடையாதவர்கள், நிச்சயமாக இதன் விளைவு எப்படியானதாக இருக்கும் என்றும், நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் மீது விழுந்திருக்கும் எத்தனை பெரிய அடி இது என்றும் அறியாதவர்களாக இருப்பார்கள்.

இந்தத் தேர்தல் மூலம் வெளிப்பட்டிருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இஸ்ரேல் வாக்காளர்கள் நன்றாகத் தெரிந்தேதான் (நெதன்யாஹுவுக்கு) வாக்களித்திருக்கிறார்கள் என்பதும், அவர்கள் முன்வைக்கப்பட்ட மாற்றை நிராகரித்திருக்கிறார்கள் என்பதும்தான். தேர்தல் பிரச்சாரத்தில் நெதன்யாஹு எத்தனை வெளிப்படையாக அமைதிக்கு எதிரானவராக இருந்தார் என்பதை நாம் பார்த்தோம். இனவெறுப்பையும் அத்தனை அதிகமாக அவர் வெளிப்படுத்தினார். அத்துடன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோசமான முறையில் தனக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டதன் மூலம் அமெரிக்க அதிபரை அவர் அவமதித்தார்.

இந்த வெற்றி அவரால் அல்ல, இஸ்ரேல் மக்களால்தான் சாத்தியமாயிற்று. வேறுவிதமாக இதைக் கணிப்பதில் அர்த்தமில்லை. அதே சமயம், அவருக்கு வாக்களித்த அத்தனை இஸ்ரேலியர்களும், வருத்தம் தரும் இந்த விஷயங்களை ஆதரிக்கிறார்கள் என்று கருதுவது சரியாக இருக்காது. அவருக்குப் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்த இஸ்ரேலியர் கள் இவை அனைத்தையும் எதிர்ப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

ஆனால், இஸ்ரேலியர்கள் ஆதரித்திருக்கும் நெதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தின் இருண்ட பக்கம் மறைமுகமான ஒன்றாக இல்லை. மாறாக, அதுதான் பிரதானப்படுத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியபோது நெதன்யாஹு குரல் அலறத் தொடங்கியது. தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம், ஒரு விஷயத்தைக் காட்டுகிறது. அதாவது, பெருவாரியான இஸ்ரேலியர்கள் கடைசி நேரத்தில், நெதன்யாஹுவையே ஆதரிக்கலாம் என்று முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இஸ்ரேல் வாக்காளர்களின் கடைசி நேர அரவணைப்பைப் பெற்றிருக்கும் நெதன்யாஹு, அவர்களின் மோசமான எண்ணங்களைச் சமன் செய்யும் விதத்தில் தனது பிரச்சாரத்தை மிகக் கவனமாக அமைத்துக்கொண்டார் என்றாகிறது.

2009-ல் டெல் அவிவில் உள்ள பார் இலான் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய நெதன்யாஹு, ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகள் செயல்படுவதை அங்கீகரித்துப் பேசியிருந்தார். ஆனால், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அதை முற்றிலும் மாற்றிக்கொண்டு, தனது ஆட்சிக்காலத்தில் பாலஸ்தீனம் தனிநாடாக உருவாவதை அனுமதிக்கப் போவதில்லை என்று பேசினார். ஆனால், அவரது இந்த மாற்றம், இஸ்ரேல் அரசியலில் அவருக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை. அதற்கு நேர்மாறாகத்தான் நடந்திருக்கிறது.

ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகளாக இஸ்ரேலுடன் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முன்வந்த அமெரிக்காவின் முடிவை நெதன்யாஹு உறுதியாக, வெளிப்படையாக எதிர்த்திருக்கும் நிலையில், அமெரிக்கா இனி என்ன செய்யப்போகிறது? பாலஸ்தீனத் தலைவர்களில் யாரேனும் இந்த முடிவை நிராகரித்திருந்தால், அவர்கள் அதற்கான விளைவை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். ஆனால், இப்படி இரட்டை நிலையை எடுக்கும் இஸ்ரேலுக்கும் இதே விதி பொருந்தும் என்று யாரும் எதிர்பார்க்கப்போவதில்லை. காரணம், இஸ்ரேல் இறையாண்மை கொண்ட நாடு. இந்த விஷயத்தில் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்ளாதபட்சத்தில், அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் சிக்கல் ஏற்படப்போவது உறுதி. ஏனெனில், ஒரே பிரதேசத்தில் இரண்டு நாடுகள் செயல்படுவதை அங்கீகரிப்பது என்பது அமெரிக்க அரசின் நோக்கமாக இருக்கிறது. அதை நெதன்யாஹு தலைமையிலான புதிய அரசு முற்றிலுமாக எதிர்க்கிறது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தலைவர்கள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டைக் களைய இயன்ற வரை முயற்சி செய்வார்கள் என்று தெரிகிறது. ஆனால், அது மிகவும் கடினமான விஷய மாகவே இருக்கும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தன்னால் நிராகரிக்க முடியும் என்று ஏற்கெனவே நெதன்யாஹு காட்டிவிட்டார். அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய நிலை அவருக்கு உருவாகவில்லை. மாறாக, அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அதுதான் காரணமாகவே அமைந்தது. இப்படியான நிலையில், பாலஸ்தீனம் குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதால் அமெரிக்காவின் எதிர்ப்பை அவர் சந்திப்பார் என்று தோன்றவில்லை.

அரபு மக்கள் குறித்து இனவெறுப்புடன் அவர் பேசியது, இஸ்ரேலுக்குள் வெளியில் பரவலான கவனத்தைப் பெறப்போவதில்லை. ஆனால், இஸ்ரேலுக்குள் அது அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முன்பே சொன்னதுபோல், அதுதான் அவருக்கு உதவியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ‘யுனைட்டெட் அராப் லிஸ்ட்’, ‘ஜியோனிஸ்ட் யூனியன்’ கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி, எதிர்பார்த்ததைவிட அதிகம். இது நல்ல விஷயம்தான். ஆனால், நெதன்யாஹுவின் பிரம்மாண்டமான வெற்றியும் அதற்காக அவரது பிரச்சாரம் அமைந்த விதமும்தான் கவனிக்கத்தக்கவை.

தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ‘மோசமான, பழைய நெதன்யாஹு’அல்ல; ‘புதிய, மிக மோசமான நெதன்யாஹு’என்பதுதான் உண்மை. இந்தப் புதிய அரசைத்தான் பாலஸ்தீனர்களும் அமெரிக்கர்களும் பிறரும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், நெதன்யாஹுவின் தேர்தல் பிரச்சாரத்தின் தொனியும், இஸ்ரேலில் வலுப்பெற்றிருக்கும் அரசியல்தன்மையும் இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தும்.

– தமிழில்: வெ. சந்திரமோகன் | தி இந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *